இந்திய கடற்படையை மேலும் வலுப்படுத்தும் வகையில் 6 அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க ஜெர்மனியுடன் கைகோர்த்துளளது மத்திய அரசு…. புரோஜக்ட் 75 திட்டத்தின் கீழ் கடற்படையை நவீனமாக்க புதிய பாய்ச்சலுடன் இந்தியா தயாராகி வருகிறது. இதுகுறித்த செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில் ஆறு மாதங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புரொஜக்ட் 75 இந்தியா திட்டம் தற்போது வேகமெடுக்க தொடங்கியுள்ளது.
ஜெர்மனியுடன் 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் “புராஜெக்ட் 75 இந்தியா” நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 6 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை இந்தியாவில் தயாரிப்பது குறித்து, Mazagaon Dockyards limited, ThyssenKrupp Marine Systems ஆகியவற்றுடன் பாதுகாப்பு அமைச்சகம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஜெர்மன் உதவியுடன் இந்தியாவில் நீர்மூழ்கி கப்பல்கள் கட்டமைக்கப்பட உள்ளன. ஜெர்மன் தொழில்நுட்பமான AIP எனப்படும் Air Independent Propulsion systems, நீர்மூழ்கிக் கப்பல்களை மூன்று வாரங்கள்
வரை நீருக்கடியில் இருக்க அனுமதிக்கும். உள்நாட்டில் தயாரிக்கப்படுவதால், நீர்மூழ்கிக் கப்பல்களின் கட்டுமான திறன் மேம்படுவதோடு, இறக்குமதியை சார்ந்திருப்பது தவிர்க்கப்படும்.
இந்தியப் பெருங்கடலில் சீனா தனது இருப்பை நவீனத்துவத்துடன் விரிவுபடுத்துவதாலும், பாகிஸ்தான் தனது கடற்படையை வலுப்படுத்துவதாலும், நீர்மூழ்கிக் கப்பல்களை நவீனபடுத்த வேண்டிய தேவை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 10 ஆண்டுகளில் 10 நீர்மூழ்கிக் கப்பல்களைப் படிப்படியாகக் கட்டமைக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது.
புரொஜக்ட் 75 இந்தியா திட்டத்தைத் தவிர்த்து, மேலும் இரண்டு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களைத் தயாரிக்கும் முயற்சியிலும் இந்தியா ஈடுபட்டுள்ளது. பேச்சுவார்த்தைகள் திட்டமிட்டபடி நடந்தால், ஆறு மாதங்களுக்குள் இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்றும், இது இந்தியாவின் மிக முக்கியமான பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்று எனவும் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.