விநாயகர்ச் சதுர்த்தி கொண்டாட்டத்தை நாம் நெருங்கிவிட்ட நிலையில், விதவிதமாகத் தயாரிக்கப்படும் பிள்ளையார்ச் சிலைகள் கண்களுக்கு விருந்து படைத்து வருகின்றன. இந்தத் தருணத்தில் உலகிலேயே மிக உயரமான விநாயகர்ச் சிலை எங்கு உள்ளது என்பதைப் பார்க்கலாம்.
வனங்கள் செழிப்படைய முழுமுதற் காரணமாக விளங்கும் யானைகள், பண்டைய காலம் தொட்டே தாய்லாந்தின் கலாசாரம், பாரம்பரியம், ஆன்மிகம் போன்றவற்றில் பின்னி பிணைந்து நிற்பவை. இதன் காரணமாகவே யானையின் அடையாளமான விநாயகக் கடவுளை தாய்லாந்து போற்றி புகழ்பாடி வருகிறது.
இந்தியாவில் முழுவதும் விநாயகர் சதுர்த்தியன்று கணேஷ வழிபாட்டுடன், விழாக்களும் களைகட்டுவது வழக்கம். சின்னஞ்சிறிய சிலைகள் முதல் பல அடி உயர சிலைகள் வரை வீடுகள், வீதிகள் தோறும் வைத்து பிள்ளையாருக்குப் பிடித்தவற்றை படைத்து இந்தியர்கள் வழிபட்டு வருகின்றனர்.
இப்படியிருக்க உலகிலேயே மிக உயரமான விநாயர்ச் சிலை இந்தியாவில் அல்லாமல் தாய்லாந்தில் இருப்பது ஆச்சரியமான உண்மை. தாய்லாந்தின் செழிப்பை உணர்த்தும் விதமாகச் சாச்சோங்சாவ் மாகாணம் க்லோங் குவான் மாவட்டத்தில் உள்ள கணேஷ் சர்வதேச பூங்காவில் கம்பீரமாக நிறுவப்பட்டுள்ளது விநாயகர்ச் சிலை…. 39 மீட்டர் உயரம், கிட்டத்தட்ட 12 மாடி அளவுக்கு உயரமான இந்தச் சிலை, 40 ஆயிரம் சதுர மீட்டர்ப் பூங்காவில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறது.
2009-2012ம் ஆண்டில் தாய்லாந்தின் சிற்ப கலைஞர்ப் பிடக் சலூம் லாவ் என்பவர், ஆனைமுகனை வடிவமைத்திருக்கிறார்… 100 டன் எடையில், 854 வெண்கல அடுக்குகளைக் கொண்டுள்ள கணபதி சிலை 4 கைகள் உடன் காட்சி தருகிறது. ப்ரப் பிகனேட், ப்ரப் பிகனேஷுயன் எனத் தாய் மொழியில் அழைக்கப்படும் நம் விநாயகனை முன்னேற்றத்தின் குறியீடாகப் பார்க்கிறது தாய்லாந்து.
அதனால்தான் அவரது கைகளில் ஆயுதங்களைத் தவிர்த்து, செழிப்பின் அடையாளமாகப் பலாப்பழத்தையும், இனிப்பு மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாகக் கரும்பையும், வாழ்வாதாரம் மற்றும் ஊட்டசத்தின் அடையாளமாக வாழைப்பழத்தையும், தெய்வீகம் மற்றும் ஞானத்தை உணர்த்தும் விதமாக மாம்பழத்தையும் தாய்லாந்து விநாயகர்க் கையில் தாங்கி நிற்கும்படி வடிவமைத்திருக்கிறது.
இதுதவிர ஞானத்தைப் பிரதிபலிக்கும் தாமரைக் கிரீடம், தேசத்தையும், உலகையும் பாதுகாக்க வல்லவர் என்பதைக் குறிக்கும் வகையில் ஓம் சின்னமும் கிரீடத்தில் உள்ளது.
ஆசிய கண்டத்திலேயே, ஒரே கல்லில் செய்யப்பட்ட மிகப்பெரிய விநாயகர்ச் சிலை, கோவை, புளியங்குளத்தில் இருக்கும் நிலையில், உலகிலேயே மிக உயரமான சிலைத் தாய்லாந்தில் இருப்பது பிள்ளையாரை அம்மக்கள் எந்தளவில் நேசிக்கிறார்கள், வழிபடுகிறார்கள் என்பதையே காட்டுவதாய் உள்ளது.