ஜம்முவில் உள்ள தாவி ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பாகிஸ்தானுக்கு இந்தியா முன்கூட்டியே தெரிவித்ததாக அதிகாரப் பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பகல்ஹாம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. மூன்று நதிகளின் நீர் மட்ட தரவுகளைப் பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்வதையும் இந்தியா நிறுத்தி வைத்தது.
பாகிஸ்தானுடன் நடந்த முந்தைய 3 போர்களின் போதும் நிறுத்தப்படாத சிந்து நதிநீர் ஒப்பந்தத்தைப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நிறுத்தியது. ரத்தமும் நீரும் ஒன்றாகப் பாயாது என்றும் பிரதமர் மோடி உறுதியாகத் தெரிவித்தார்.
சிந்து நதியின் தண்ணீரைத் தடுத்தால் அது நாட்டின் மீதான போர் நடவடிக்கையாகக் கருதப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்த நிலையிலும், இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.
காலநிலை மாற்றத்தால் பாதிப்புக்குள்ளான நாடுகளில், பாகிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. தீவிர வானிலை மாற்றங்களால் எதிர்ப்பாராத கனமழை, வெள்ளம் பாகிஸ்தானில் அதிகரித்து வருகிறது.
பாகிஸ்தானையே கடும் மழையும் வெள்ளமும் புரட்டி போட்டுள்ளது. புனேர், பஜௌர், ஸ்வாட், ஷாங்க்லா, மன்சேரா மற்றும் பட்டாகிராம் ஆகிய மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகப் பஞ்சாப் மாகாணம் அதிகப் பாதிப்பு அடைந்துள்ளது. வடக்கு பாகிஸ்தானில் பெய்த கனமழையில் 24 மணி நேரத்தில் சுமார் 320 பேர்ப் பலியாகியுள்ளனர்.
வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மாத இறுதியில் குறைந்துவிடும் பருவமழை,இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கியுள்ளது என்றும் அது, நீண்ட மாதங்கள் நீடிக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கனமழையால்,பெரும்பாலான ஆறுகள், ஏரிகள் மற்றும் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்ப் பகுதியிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்திய எல்லையைத் தாண்டி, சிந்து நதிப் படுகையின் ஜீலம், ரவி மற்றும் தாவி ஆறுகள் மற்றும் அவற்றின் துணை நதிகளின் நீர் நிலைகளை 24 மணி நேரமும் கண்காணிப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஜம்மு-காஷ்மீர் ஜல் சக்தி அமைச்சர் ஜாவேத் அகமது ராணா உத்தரவிட்டுள்ளார்.
இந்தச்சூழலில், சிந்து நதியில் கடும் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்த பாகிஸ்தானுக்கு இந்தியா முன்கூட்டியே எச்சரித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள இந்திய துாதரகம் மூலம் இந்தத் தகவல் பகிரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பருவமழைக் காலத்தில், மூன்று நதிகளில் நீர் மட்டம் உயர்வது குறித்து இந்தியா முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தது.
பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பதற்கான அவசரக் கால நடவடிக்கைகளை எடுக்க இந்தியாவின் எச்சரிக்கை உதவியாக இருந்தது என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின், இந்திய பாகிஸ்தான் உறவில் மோசமடைந்துள்ள நிலையில், வெள்ளம் குறித்து இந்தியா முன்கூட்டியே எச்சரித்தது, நல்லெண்ணத்தின் அடையாளமாகும் என்று பாராட்டபடுகிறது.