பாரதத்தை விஸ்வகுரு அந்தஸ்துக்கு உயர்த்துவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் உண்மையான நோக்கம் என, அந்த அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி டெல்லியில் நடைபெற்று வரும் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய அந்த அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பாகவத், ஆர்எஸ்எஸ் அமைப்பின் சிந்தனை விதை, பல ஆண்டுகளுக்கு முன்பே முளைத்ததாகவும்,
1925-ம் ஆண்டு விஜயதசமி நாளுக்கு பிறகு அது ஒரு அமைப்பாக டாக்டர்.ஹெட்கேவரால் அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஆர்எஸ்எஸ் சங்கம் ஏன் நிறுவப்பட்டது உள்ளிட்ட பல கேள்விகளுக்கான பதில், தாய்நாட்டின் மகிமை உயர்த்தப்பட வேண்டும் என்பதும், உலகின் தலைசிறந்த நிலையை அடைய வேண்டும் என்பதுமே என்றும் மோகன் பாகவத் கூறினார்.
அத்துடன் நமது தர்மம் ஒற்றுமையே அன்றி மோதல் அல்ல எனக் குறிப்பிட்ட அவர், ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் அதன் ஸ்வயம் சேவகர்களின் உறவு பல பிறவிகளாக இணைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், ஆர்எஸ்எஸ் அமைப்பு யாரையும் சார்ந்தது அல்ல எனக் குறிப்பிட்ட மோகன் பாகவத், இந்த அமைப்பை அதன் ஸ்வயம் சேவகர்களே வழிநடத்துவார்கள் என்றும் தெரிவித்தார்.