கோவைக் காமராஜர் சாலையின் இருபுறமும் தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாத காரணத்தினால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
கோவைத் திருச்சி சாலை மற்றும் அவினாசி சாலையை இணைக்கும் பிரதான சாலைத் தான் இந்தக் காமராஜர் சாலை. சுமார் மூன்று கிலோ மீட்டர்த் தூரம் கொண்ட இந்தக் காமராஜர் சாலையைப் பள்ளி செல்வோர்த் தொடங்கி பணிக்கு செல்வோர் வரை ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தச் சாலையின் இருபுறங்களிலும் குடிநீர்ச் சேவை, இணையதளக் கேபிள் எனப் பல்வேறு பணிகளுக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
சாலையின் இருபுறங்களில் பள்ளமாகக் காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனே பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதோடு சாலைகளில் பறக்கும் புழுதிகளால் வாகன ஓட்டிகளுக்குச் சிரமத்தை ஏற்படுத்துவதோடு, அருகில் உள்ள கடைகளிலும் மாசு படிந்து விற்பனைப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் விற்பனையாளர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாகச் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறைப் புகார்தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் தற்போதுவரை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார்த் தெரிவிக்கின்றனர்.
எண்ணற்ற கல்லூரிகள் செயல்படும் இந்த அவினாசி சாலையில் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர்ப் பயணித்துவரும் நிலையில், விபத்துக்கள் நடைபெறுவதற்கு முன்கூட்டியே சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக எழுந்துள்ளது.