மதுரை மாநாட்டில் தவெகத் தொண்டர் தூக்கி வீசப்பட்ட விவகாரத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் பாரபத்தி பகுதியில் கடந்த 21ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில், தொண்டர்கள் மத்தியில் விஜய் ரேம்ப் வாக் மேற்கொண்டபோது அவரை நெருங்கி வந்த தொண்டர்களைப் பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர்.
இரும்புக்கம்பிகளைத் தாண்டி வந்த தொண்டர்களைத் தடுத்து நிறுத்திய பவுன்சர்கள் மேடையில் இருந்து தூக்கி வீசினர்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்ட பெரம்பலூரைச் சேர்ந்த சரத்குமார் என்ற இளைஞர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தவெகத் தலைவர் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ்ப் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.