ஏழை மாணவர்களின் கல்வி நலனில் தமிழக அரசு கெளரவம் பார்க்கக் கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்த் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களின் 25 சதவீதச் சேர்க்கைக்கான நிதியைத் தனியார் பள்ளிகளுக்கு ஒதுக்க வேண்டும் எனக் கடந்த ஜூன் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவைத் தமிழக அரசு இதுவரை அமல்படுத்தவில்லை எனத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மாணவர்ச் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இணையதளத்தில் ஏற்பாடு செய்யாதது ஏன்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாணவர் நலனில் அக்கறைக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
இதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பு, மாணவர்கள் நலனில் அரசுக்கு அக்கறை உள்ளது என்றும், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையைச் செப்டம்பர் 9ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.