ஜம்மு-காஷ்மீரில் வைஷ்ணவி தேவி கோயில் அருகே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது சோகத்தை ஏற்பட்டுத்தி உள்ளது.
ஜம்மு – காஷ்மீரில் கிஷ்த்வர் மற்றும் தோடா மாவட்டங்களில் திடீரெனப் பெய்த கனமழையால் திரிகூட மலையின் உச்சியில் உள்ள புனிதத் தலமான வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 30 பேர்ப் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
மேலும், இந்த நிலச்சரிவில் சிக்கிய பலர்க் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தொடர் மழையால் ஜம்மு – காஷ்மீர் முழுவதும் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, குடியிருப்புகள் மற்றும் பல்வேறு கட்டடங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
ஆற்றின் நடுவே இருந்த பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டு, மின் கம்பங்கள் மற்றும் மொபைல் கோபுரங்களும் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
இதனிடையே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த சம்பவம் வருத்தமளிப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன என்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.