பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு என்ற கனவு உண்மையிலேயே நனவாகி உள்ளதாகப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் மௌவில் நடைபெற்ற முப்படைகளின் கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா ஒருபோதும் போரை விரும்பும் நாடாக இருந்ததில்லை என்றும், யாருக்கும் எதிராக இந்தியா ஒருபோதும் ஆக்கிரமிப்பைத் தொடங்கியதில்லை எனவும் கூறினார்.
யாராவது நமக்குச் சவால் விட்டால் நாம் வலிமையுடன் பதிலளிக்கப் பாதுகாப்புத் துறைத் தயாராக இருக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.
சைபர்ப் போர், செயற்கை நுண்ணறிவு, ஆளில்லா வான்வழி தாக்குதல், செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு ஆகியவை எதிர்காலப் போர்களை வடிவமைப்பதாகக் கூறிய அவர், நவீனப் போர்கள் இனி நிலம், கடல் மற்றும் வான்வெளியில் மட்டுமின்றித் தற்போது விண்வெளி மற்றும் சைபர் ஸ்பேஸிலும் விரிவடைவதாகக் குறிப்பிட்டார்.
எதிர்காலப் போர்கள் வெறும் ஆயுதப் போர்களாக இருக்காது எனக்கூறிய அவர், அவைத் தொழில்நுட்பம், உளவுத்துறை, பொருளாதாரம் மற்றும் ராஜதந்திரத்தின் ஒருங்கிணைந்த விளையாட்டாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றி ஒரு சரியான எடுத்துக்காட்டு எனக் கூறிய அவர், உள்நாட்டு உபகரணங்கள் மற்றும் ஆயுத மேம்பாட்டின் வெற்றியை நிரூபிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக ஆப்ரேஷன் சிந்தூர் உருவெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரம் கோடிக்கும் குறைவாக இருந்த இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதிகள் தற்போது 24 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகவும், இது வர்த்தகம் அல்லது உற்பத்தி பற்றியது மட்டுமல்ல, இது இந்தியாவின் மாறிவரும் உலகளாவிய அடையாளத்தின் சின்னம் எனவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.