பீகாரில் பிரதமர் மோடியின் தாயாருக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்ட விவகாரத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பீகாரில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து, கடந்த 17-ம் தேதி முதல் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேரணியில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் பீகாரின் தர்பங்காவில் நடைபெற்ற பேரணியின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயாரை அவமதிக்கும் வார்த்தைகளால் திட்டி காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் கோஷமிட்டுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தொண்டர்களின் செயலுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பேரணி நடத்திய எம்பி ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகிய இருவரும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே மோடி மற்றும் அவரது தாயாருக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்ட விவகாரத்தில் பீகார் மக்கள் ஒருபோதும் ராகுல்காந்தியை மன்னிக்க மாட்டார்கள் என பாஜக செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமாரும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பீகாரில் பிரதமர் மோடியின் தாயாருக்கு எதிராக கோஷம் எழுப்பட்ட சம்பவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தலைமையின் கீழ் காங்கிரஸ் அருவருக்கத்தக்க அரசியலை செய்து வருவதாகவும் அமித்ஷா விமர்சித்துள்ளார். இந்த செயலை நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் எனவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.