அதிமுக கட்சி விதிகளின் திருத்தத்தை எதிராக வழக்கு தொடர அனுமதியளித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக கட்சி விதிகள் மற்றும் உட்கட்சி தேர்தலுக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் சார்பில் உரிமையியல் வழக்கு தொடர சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி மகன் சுரேன் உட்பட இருவர் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், அதிமுக கட்சி விதிகள் திருத்தத்துக்கு எதிராக வழக்கு தொடர ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகியோருக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்த மனுவில் நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் செந்தில்குமார் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதில், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்று கொண்டாதாக நீதிபதிகள் தெரிவித்தனர். தொண்டர்கள் சார்பில் வழக்கு தொடர சுரேன் பழனிச்சாமி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோருக்கு அனுமதியளித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
















