மதுரையில் சிறாருக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக 7 மாதங்களில் 90க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையில் பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றச்செயல்களைத் தடுக்க மாநகரக் காவல்துறை சார்பில் மகளிர் காவலர்கள் அடங்கிய தனிக்குழு செயல்பட்டு வருகிறது.
பள்ளி, கல்லூரி மற்றும் பெண்கள் அதிகமாகப் பணிபுரியும் இடங்களில் போக்சோ குறித்து தனிக்குழு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், சிறுமிகள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்களும் அதிகரிப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 7 மாதங்களில் திருப்பரங்குன்றம், மதுரை மாநகர், தல்லாக்குளம், அண்ணாநகர் ஆகிய மகளிர் காவல் நிலையங்களில் மொத்தம் 94 போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்செயல்கள் பெரும்பாலும் உறவினர்கள், நட்பு வட்டாரத்திற்குள் நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
18 வயது பூர்த்தியாகும் முன்பே சொத்துக்கு ஆசைப்பட்டு உறவினர்களுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைப்பது போன்ற செயலாலும் போக்சோ வழக்கில் சிலர் சிக்குவதாக காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.