மதுரை மாநாட்டில் நடிகர் விஜய் குறிப்பிட்ட வார்த்தைக்கு பொருத்தமானவர் நடிகர் கமல்ஹாசன்தான் என நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், துடியலூர் பகுதியில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, நடிகர் ரஞ்சித் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய நடிகர் ரஞ்சித், 2014ல் கோவையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடியை சந்திப்பதற்கு நடிகர் விஜய் பூனைக்குட்டி போன்று கையை கட்டிக்கொண்டு நின்றதாக தெரிவித்தார்.
தலைவா என்ற தனது படத்தை ரிலீஸ் செய்வதற்காகவே பிரதமர் மோடியை சந்திக்க காத்திருந்ததாக கூறிய அவர், அதை எல்லாம் மறந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்பதுபோல தற்போது விஜய் பேசுகிறார் என விமர்சித்தார்.
பிரதமரை மிஸ்டர் என்று குறிப்பிடுவதுதான் விஜய்யின் அரசியல் நாகரீகமா என கேள்வி எழுப்பிய அவர், உலகமே பிரதமர் மோடியை வியந்து பார்ப்பதாக கூறினார்.