தொடர் கனழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்களால் பஞ்சாப் மாநிலமே ஸ்தம்பித்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
எங்கு பார்த்தாலும் வெள்ளம். சாலைகள், வயல்வெளிகள், குருத்துவாராக்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் வெள்ளம். இன்றைய தேதிக்குப் படகுகள் மூலம் மட்டும்தான் பஞ்சாப்பில் பயணிக்க முடியும் எனக் கூறும் அளவுக்கு ஒட்டுமொத்த மாநிலமே வெள்ளக்காடாகியுள்ளது.
1988ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக மோசமான வெள்ளப் பாதிப்பை சந்தித்துள்ளது பஞ்சாப். இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர்ப் பகுதிகளில் பெய்த கனமழையால் சட்லஜ், பியாஸ், ரவி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம்தான் தற்போது பஞ்சாப்பையே நிலைகுலைய வைத்துள்ளது.
குறிப்பாக, பதன்கோட், குர்தாஸ்பூர், ஃபாசில்கா, கபுர்தலா, டர்ன் தரன், ஃபெரோஸ்பூர், ஹோஷியார்பூர், அமிர்தசரஸ் ஆகிய பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 518 கிராமங்கள் முழுவதுமாக வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் படகுகள் மூலவும், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.
பஞ்சாப் விவசாயத்தை நம்பியுள்ள மாநிலம். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் வயல்வெளிகளைக் காணாமல் போகசெய்யும் அளவுக்கு மூழ்கடித்துள்ளது. தங்கள் கண் முன்னால், வயல்வெளிகள் நீரில் மூழ்குவதை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் காட்சிகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.
பஞ்சாபில் கடந்த 24 மணிநேரத்தில் 243 சதவீதம் அதிக மழைப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, ரவி நதியின் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வேகமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப்-க்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகளும் முழுவீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.