ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த நாட்டின் கலாச்சாரச் சின்னமான தரும பொம்மைப் பரிசாக வழங்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். தலைநகர் டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் பொருளாதாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பிரதமர் மோடி உரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு ஷோரின்சான் தரும-ஜி கோயிலின் தலைமைப் பூசாரி ரெவ் சீஷி ஹிரோஸ் தரும பொம்மையைப் பரிசாக அளித்தார்.
“இந்தப் பொம்மை ஜப்பானின் முக்கியமான கலாச்சாரச் சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தரும பொம்மையின் பரிசு, இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார உறவை எடுத்துக்காட்டுகிறது.
இது இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் அடையாளமாக விளங்குகிறது. ஜென் பௌத்தத்தின் அடித்தள நபராகவும் கருதப்படும் இந்திய துறவி போதி தர்மரின் மாதிரியாக இந்தத் தருமா பொம்மை வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று வெளியுறவு அமைச்சகம் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.