நீலகிரியில் உள்ள ரிசார்டுகளில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கைத் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி, மசினக்குடி உள்ளிட்ட வனப்பகுதிகளில் உள்ள ரிசார்டுகளில் அதிகச் சப்தம் எழுப்பும் ஒலிப் பெருக்கிகள் பயன்படுத்துவதாகவும் இதனால் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார், சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இரவு நேரங்களில் தங்கும் விடுதிகளில் என்ன மாதிரியான ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை மாவட்ட ஆட்சியர், வனத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய வேண்டுமெனக் கூறிய நீதிபதிகள், இது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.