உலக நாடுகள் மீதான கூடுதல் வரி விதிப்பை நீக்குமாறு அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சூழலில், டிரம்ப் அடுத்தக்கட்ட நகர்வுக்குத் தயாராகி வருகிறார். வரி விதிப்பில் இருந்து பின்வாங்காமல் இருக்கச் சில சட்டங்களையும் ஆராய்ந்து வருகிறார். அது என்ன? விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து TRUTH இணையதளத்தில் விமர்சனக் கணைகளை தொடுத்துள்ள டிரம்ப், நீதிமன்றத்திற்கே தெரியும், இறுதியில் நாம் தான் வெல்வோம் என்று ரஜினி ஸ்டைலில் பதிவிட்டிருக்கிறார்.
உலக நாடுகள் மீதான வரி விதிப்பை, வர்த்தகப் போர் என்று குறிப்பிட்டுள்ள டிரம்ப், அமெரிக்கத் தொழிலாளர்கள், நிறுவனங்களைப் பாதுகாக்க மிகச் சிறந்த கருவி வரிவிதிப்புதான் என்று நியாயப்படுத்தியிருக்கிறார்.
டிரம்பின் உலகளாவிய வரிகளைச் சட்டவிரோதமானது என்று அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் கூறியிருந்தாலும், அவை அப்படியே இருக்க அனுமதிக்கிறது. குறிப்பாக இதற்கு முன்பு எந்த அதிபரும் பயன்படுத்தாத, அசாதாரண சூழ்நிலைகளில் பயன்படுத்தக்கூடிய IEEPA சட்டத்தை, வர்த்தக ஏற்ற தாழ்வு நாட்டின் பாதுகாப்புக்குத் தீங்கு விளைவிக்கும் என்ற கோணத்தில், டிரம்ப் வரம்பை மீறி பயன்படுத்தியிருப்பதாக நீதிமன்றம் கூறியிருந்தது.
இது டிரம்ப், மீண்டும் வரிகளை விதிக்க முடியுமா என்ற கேள்விகளையும் முன் வைத்தது. டிரம்ப் IEEPA- சட்டத்தைப் பயன்படுத்த முடியாது என்றாலும், இறக்குமதி வரிகளை விதிக்க அமெரிக்க அதிபருக்கு வேறு பல வழிகளும் உள்ளன என்பது தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் IEEPA- சட்டத்தைப் பயன்படுத்த முடியாது என்றாலும், 1974ம் ஆண்டு அமெரிக்க வர்த்தகச் சட்டம் பிரிவு 301ன் படி வர்த்தகக் கூட்டாளிகளுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள Lutnick மற்றும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகளை டிரம்ப் கட்டாயப்படுத்த முடியும்.
எஃகு, அலுமினிய இறக்குமதிக்கு 1962ம் ஆண்டு வர்த்தகச் சட்டப்பிரிவு 232-ஐ பயன்படுத்தி வரி விதிக்க முடியும். இதுதவிர, 1930ம் ஆண்டு இயற்றப்பட்ட வர்த்தகச் சட்டப்பிரிவு 338-ஐயும் பயன்படுத்தலாம். அமெரிக்க வரலாற்றில் இதுவரைப் பயன்படுத்தப்படாத இந்தச் சட்டம், அதிபரை 50 சதவிகிதம் வரை வரிவிதிக்க அனுமதிக்கிறது.
நீதிமன்றத் தீர்ப்புகள் எதுவாயினும், வரி விதிப்பில் இருந்து பின்வாங்கக் கூடாது என்பதில் டிரம்ப் உறுதியாக இருக்க இதுபோன்ற சட்டங்களும் காரணமாகப் பார்க்கப்படுகிறது.