லாகூர் உள்ளிட்ட மாகாணங்களில் ஏற்பட்ட பெரும் வெள்ளச் சேதத்திற்கு இந்தியா தான் காரணம் என்று அபாண்டமாகப் பழி சுமத்தியிருக்கிறது பாகிஸ்தான். இந்தக் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்துள்ள இந்தியா, மனிதாபிமான அடிப்படையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்ததை மறந்துவிடக் கூடாது என்று கண்டித்துள்ளது.
அண்மையில் பெய்த பருவமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளமும்… நிலச்சரிவும், இந்தியா – பாகிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தின. இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இதேபோன்று அண்மையில் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம், லாகூர்ப் புறநகர் பகுதிகளைச் சூறையாடியது… முக்கிய நகரமான ஜாங் பகுதி வெள்ளத்தில் மிதந்தது.. 40 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான வெள்ளப் பாதிப்பாகப் பதிவானது.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையோ, வெள்ள நிவாரண பணிகளையோ மேற்கொள்ளாமல் மக்களைக் காப்பாற்ற தவறிய பாகிஸ்தான் அரசு, வெள்ளப் பாதிப்புக்கு இந்தியாதான் காரணம் என்ற பழிசுமத்தியிருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது
பஹல்காம் தாக்குதலுக்குப் பின் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததாலும், வெள்ளப் பாதிப்பு தொடர்பான முன்னெச்சரிக்கைத் தரவுகளை இந்தியா வழங்காததாலும், பாகிஸ்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு அமைச்சர் அசன் இக்பால் குறைகூறியுள்ளார்.
சிந்துநதி நீர் ஒப்பந்தம் செயல்பாட்டில் இருந்திருந்தால் வெள்ளத்தின் தாக்கத்தைக் குறைத்திருக்க முடியும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், இந்தியாவில் ரவி நதியின் குறுக்கே கட்டப்பட்ட மாதோபூர் அணை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாலும் லாகூர்ப் பெரும் சேதத்தைச் சந்தித்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியிருந்தனர்.
பாகிஸ்தானில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட இந்தியாவே காரணம் என்ற கோணத்தில் பாகிஸ்தான் பிரசாரம் செய்து வருவதை இந்தியா கண்டித்துள்ளதோடு, குற்றச்சாட்டையும் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதே நேரத்தில் மாதோபூர் தடுப்பணையின் இரண்டு மதகுகள் மட்டும் உடைந்ததாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
மாதோபூர் தடுப்பணை மதகுகள் சேதமடைந்த போதும், நீரோட்டத்தைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ள இந்தியா தரப்பு, தொடர்ந்து நீடித்த மழையே வெள்ளத்திற்குக் காரணம் என்பதையும் தெளிவாக எடுத்துரைத்துள்ளது.
1960 சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தபோதும், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டன. மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு நான்கு முறை வெள்ள அபாய எச்சரிக்கை வழங்கப்பட்டதையும் இந்தியா உறுதிபடுத்தியுள்ளது.
காலநிலை மாற்றம் என்பது இருதரப்பு பிரச்னை அல்ல என்பதை உணர்ந்து, மனிதாபிமானத்தோடு உதவி புரிந்த இந்தியாவுக்கு நன்றித் தெரிவிக்க மனமில்லாத பாகிஸ்தான் வீண் பழிசுமத்துவதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்திய மக்களின் கருத்தாக உள்ளது.