உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதம் வேரறுக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் கலந்துரையாடினர். பின்னர், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட நாடுகளின் தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.
பின்னர், மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஷாங்காய் உச்சி மாநாட்டில் பிரமாண்டமான வரவேற்பு அளித்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். பல ஆண்டுகளாக பயங்கரவாத பாதிப்பை இந்தியா சந்தித்து வருவதாக கூறிய பிரதமர் மோடி, பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதத்தின் கோர முகத்தை கண்டோம் எனவும் தெரிவித்தார்.
பயங்கரவாதம் தொடர்பான இரட்டை நிலைப்பாடுகள் ஏற்கத்தக்கவை அல்ல என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். பயங்கரவாத தாக்குதல்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் சவாலாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்தை ஒருமனதாக எதிர்ப்பதே மனிதகுலத்தின் முதல் பணி என்றும் வலியுறுத்தினார். மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச நாடுகள் ஒன்றுபட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு எனவும் பிரதமர் மோடி கூறினார்.