லீக்ஸ் கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் சியாட்டில் சவுண்டர்ஸ், இண்டர் மியாமி அணி வீரர்கள் மைதானத்திலேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
லீக்ஸ் கோப்பைக் கால்பந்து போட்டி ஐரோப்பிய மற்றும் அமெரிக்கக் கிளப் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான இறுதி போட்டி அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள லூமென் ஃபீல்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் இன்டர் மியாமி மற்றும் சியாட்டில் சவுண்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடர்ந்து போட்டியின் 26 ஆவது நிமிடத்தில் சியாட்டில் அணி வீரர் ஒஸாசி டி ரொஸாரியோ கோல் அடித்தார்.
அதற்குப் பதில் கோல் அடிக்க முடியாமல் இண்டர் மியாமி வீரர்கள் தடுமாறினர். இரண்டாம் பாதியிலும் சியாட்டில் அணி வீரர்கள் சிறப்பாகச் செயல்பட, அலெக்ஸ் ரோல்டன் மற்றும் பால் ரோத்ராக் அடுத்தடுத்து தலா ஒரு கோல் அடித்தனர்.
இண்டர் மியாமி அணி மெஸ்ஸி இருந்தும் கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்காததால் மூன்றுக்கு, பூஜ்ஜியம் என்ற கணக்கில் படுதோல்வியடைந்தது. தோல்வியைத் தாங்கி கொள்ள முடியாத இண்டர் மியாமி அணி வீரர்கள், சியாட்டில் சவுண்டர்ஸ் அணி வீரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் சண்டையாக மாற மைதானத்திலேயே இரு அணி வீரர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் மைதானத்தில் பதற்றம் ஏற்பட்டது.