தமிழகத்திற்கான நிதியைக் கேட்டுப் பெறுவதற்குக் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் தவறிவிட்டுத் தற்போது உண்ணாவிரதம் எனும் நாடகத்தை அரங்கேற்றியிருக்கும் காங்கிரஸ் எம் பி சசிகாந்த் செந்திலின் செயல்பாடு காங்கிரஸ் கட்சிக்குள்ளாகவே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. தர்மஸ்தலா வழக்கின் விசாரணைத் தன்னை நோக்கி திரும்புவதை முன்கூட்டியே அறிந்ததாலே இந்த உண்ணாவிரத நாடகம் என்ற விமர்சனமும் பரவலாக எழுந்துள்ளது.
ஐ ஏ எஸ் அதிகாரியாகக் கர்நாடகாவின் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த பின், அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டுக் காங்கிரஸில் இணைந்தவர்த் தான் இந்தச் சசிகாந்த் செந்தில். கட்சி மேலிடத்தில் கிடைத்த வரவேற்பின் காரணமாக நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வான பின், எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வராத சசிகாந்த் செந்தில், தற்போது சமக்ரச் சிக்ஷா அபியான் என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ்த் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க வலியுறுத்தி, கடந்த 29ஆம் தேதி திருவள்ளூரில் தனது தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்றுத் தன் தொகுதிக்கும், தமிழகத்திற்கும் தேவையான திட்டங்களையும், நிதியையும் கேட்டுப்பெறுவதற்கான வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டு தற்போது கல்விக்கான நிதியை வழங்க மறுப்பதாகக் கூறி உண்ணாவிரதத்தைத் தொடங்கியிருப்பது காங்கிரஸ் கட்சிக்குள்ளாகவே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவர், தேசிய அளவிலோ, மாநில அளவிலோ இருக்கும் கட்சித் தலைவர்களிடம் எந்தவித ஒப்புதலையும் பெறாமல் கூட தன்னிச்சையாக உண்ணாவிரதத்தைத் தொடங்கியதன் பின்னணியில் அதிர்ச்சித் தகவல் ஒன்று மறைந்திருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
அண்மையில் நாட்டையே புரட்டிப் போட்ட தர்மஸ்தலா வழக்கில் பொய்ப்புகார் அளித்த நபர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோடிக்கணக்கான பக்தர்கள் வருகைத் தரும் மஞ்சுநாதா கோயிலின் புனிதத்தைக் கெடுக்க திருவள்ளூர் எம் பி சசிகாந்த் செந்தில் தீட்டிய சதி தான் இந்தப் பொய்ப்புகார் எனக் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி குற்றம் சாட்டியிருந்தார்.
புகார்த் தாரர் கடந்த பதினொரு ஆண்டுகளாகத் தமிழகத்தில் தங்கியிருந்ததும், காங்கிரஸ் மேலிடத்தின் மூலம் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு அழுத்தம் கொடுத்ததையும் பார்க்கும் போது தர்மஸ்தலா பொய் புகாருக்கும் காங்கிரஸ் எம் பி சசிகாந்த் செந்திலுக்கும் தொடர்பிருப்பதாகச் சமூக வலைதளங்களில் விமர்சனம் எழத்தொடங்கின.
தர்மஸ்தலா வழக்கின் புகார்தாரரிடம் சிறப்பு விசாரணைக் குழு கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழகத்திற்கான நிதியைப் பெறுவதற்கான வாய்ப்பு அனைத்தையும் தவறவிட்டுவிட்ட சசிகாந்த் செந்தில், திடீரெனச் சாகும்வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கியிருப்பது அவர் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
யாருக்கும் எந்தவிதத் தகவலையும் தெரிவிக்காமல் தன்னிச்சையாக உண்ணாவிரதத்தைத் தொடங்கியிருப்பது காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தற்போது மேல்சிகிச்சைக்காகச் சென்னை அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சசிகாந்த் செந்திலைக் கடந்த மூன்று தினங்களாகச் சந்திக்காத காங்கிரஸ் தமிழகத் தலைவர் செல்வபெருந்தகை, சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்த நிலையில், இரவு நேரத்தில் பார்த்துத் தனது ஆதரவை மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவை மிஞ்சும் வகையில் சசிகாந்த் செந்தில் நடத்தும் உண்ணாவிரத நாடகம் திமுகத் தலைமைக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் தற்போது வரை யாரும் அவரைச் சந்திக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
உண்மையாகவே தமிழகத்திற்கான கல்வி நிதியைப் பெறுவதற்காகத்தான் சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறாரா ? அல்லது தர்மஸ்தலா வழக்கின் விசாரணைத் தன்னை நோக்கி திரும்புவதை முன்கூட்டியே அறிந்தததால் அதனைத் திசை திருப்புவதற்காக உண்ணாவிரதம் எனும் நாடகத்தைக் கையில் எடுத்திருக்கிறாரா? என்ற கேள்விகளுக்கு அடுத்தடுத்த நாட்களில் பதில் கிடைக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.