ஜம்மு காஷ்மீர்ப் பஹல்காமில் பாகிஸ்தான் நடத்திய எல்லைத் தாண்டிய பயங்கரவாத தாக்குதலுக்கு,ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிரகடனத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, இந்தியா மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சீனாவின் தியான்ஜின்னில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயங்கரவாதத்தின் சுமைகளை இந்தியா தாங்கி வருவதாகவும், வெளிப்படையாகச் சில நாடுகள் பயங்கரவாதத்தை ஆதரவளிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும் என்றும் கேள்வியெழுப்பினார்.
மேலும், பயங்கரவாதம் குறித்த எந்த இரட்டை நிலைப்பாடும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்ட குரலில் அனைத்து நாடுகளும் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.
பிரதமர் மோடி இப்படி உரையாற்றிய சில நிமிடங்களிலேயே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் பிரகடனம், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ள இந்தப் பிரகடனத்தில், இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியவர்கள், ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் ஆதரவு அளித்தவர்கள் எனச் சம்பந்தப்பட்ட அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்ப்பதில் இறையாண்மைக் கொண்ட நாடுகள் மற்றும் அவற்றின் அதிகாரிகளின் முன்னணி பங்கை இந்தப் பிரகடனம் அங்கீகரித்துள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் கடுமையாகக் கண்டித்துள்ளன. மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இரட்டை நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் வலியுறுத்தியுள்ளன.
இந்தப் பிரகடனத்தில், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. பாகிஸ்தானைப் பற்றி நேரிடையாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் உறுப்பு நாடுகளின் உறுதியை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிரகடனம் மீண்டும் உறுதி படுத்தியுள்ளது.
பயங்கரவாத அமைப்புகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாகப் பாகிஸ்தான் உள்ளது என்ற இந்தியாவின் நீண்டகாலமாகவே கூறிவருகிறது. முன்னதாக, கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டில், பஹல்காம் பயங்கர வாத தாக்குதல் குறித்து எதுவும் குறிப்பிடப் படாத கூட்டறிக்கையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கையெழுத்திடவில்லை. இந்தியாவின் கடும் எதிர்ப்பு காரணமாக, கூட்டறிக்கை வெளியிடப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் வெளியிடப் பட்ட கூட்டறிக்கையில், பஹல்காம் பயங்கர வாத தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 25வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்துக் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில், பாகிஸ்தானை தனிமைப் படுத்த இந்திய எடுத்த முயற்சிக்குக் கிடைத்த ராஜ தந்திர வெற்றியாகும்.