சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து உரங்களை இறக்குமதி செய்யும் இந்தியா, 7 ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின் புதிய உரத் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளது. இது நாட்டை இறக்குமதி சார்பு நிலையில் இருந்து ஏற்றுமதியை நோக்கி தள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாய நாடான இந்தியா, உரங்களின் தேவையை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்து வருகிறது. நைட்ரஜன், பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களை, ரஷ்யா, சீனா,மொராக்கோ, ஓமன் மற்றும் சவுதி அரேபியா நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்து வருகிறது.
குறிப்பாகச் சீனாவிடம் இருந்து மட்டும் 80 சதவிகித அளவுக்கு உரங்களை வாங்குகிறது… தற்போது ரஷ்யாவிடம் இருந்து முன்னெப்போதும் இல்லாத வகையில் 33 சதவிகிதம் அளவுக்கு உரங்களை இறக்குமதி செய்து வருகிறது.
உள்நாட்டுத்தேவையைப் பூர்த்தி செய்யவும், ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் மேக் இன் இந்தியா திட்டத்தைக் கையில் எடுத்திருக்கும் இந்தியா, உரத் தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஏழு ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பின்னர் இந்தியா உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீரில் கரையக்கூடிய உரத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
சுரங்க அமைச்சகத்தின் ஆதரவுடன், இந்திய மூலப்பொருட்கள் மற்றும் தாவரங்களைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்ட சிறப்பு உரங்கள், இந்தியாவின் உரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்றும், இந்தியாவை ஏற்றுமதியில் ஆதிக்கம் செலுத்தும் நாடாக மாற்றும் என்றும் Soluble Fertilizer Industry Association தலைவர் ராஜீப் சக்ரவர்த்தி தெரிவித்திருக்கிறார்.
சிறப்பு உரத் தேவைக்குச் சீனாவையே இந்தியா முழுமையாக நம்பியிருக்கக் கூடிய நிலை உள்ளதாகவும், 95 சதவிகிதம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அங்கிருந்து பெறப்படுவதாகவும் ஆய்வறிக்கைக் கூறுகிறது. 2005ம் ஆண்டு ஐரோப்பிய விநியோகஸ்தர்கள், இந்திய தேவைக்காகச் சீன உரங்களைக் கொள்முதல் செய்தபோது, சீன நிறுவனங்கள், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஆதிக்கம் செய்யத் தொடங்கின.
தற்போது இந்தியாவின் புதிய உரத் தொழில்நுட்பம் பெரும் எதிர்பாரப்பை ஏற்படுத்திய நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின் வணிக ரீதியான பயன்பாட்டுக்கு வரும் என்றும், உரத் தயாரிப்புக்காகப் பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பூஜ்ஜிய கழிவுநீர், உமிழ்வு இல்லாத காரணத்தால்தான், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உரங்கள் பயன்பாட்டுக்கு வந்தால் விவசாயிகளுக்கும், வேளாண்மைக்கும் பெரிய அளவில் பலன் கிடைக்கும் என்றும், இறக்குமதி சார்பு நிலையைக் குறைத்து இந்தியாவை உர ஏற்றுமதி நாடாக உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.