தமிழகத்தில் அனைத்து மாணவர்களின் கல்விக்கடனும் ரத்து செய்யப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் ஸ்டாலின் அவர்களே? என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தமிழக இளைஞர்களின் ஆதரவை அறுவடை செய்யும் நோக்கில், தமிழகக் கல்லூரிகளில் பயில்வதற்காக வங்கிக் கடன் பெற்ற 30 வயதுக்குட்பட்ட அனைத்து இளைஞர்களின் கல்விக்கடனையும் அரசே திருப்பி செலுத்தும் என வாக்குறுதி எண் 159 இல் தெரிவித்த அறிவாலயம் ஆட்சி அமைத்தவுடன் அதை அப்படியே கமுக்கமாக மூடி மறைத்துவிட்டது.
தங்களை நம்பி வாக்களித்த மாணவர்களையும் இளைஞர்களையும் நடுத்தெருவில் நிறுத்திவிட்டது. ஒரு கண்ணிற்கு வெண்ணெய்யும், மறு கண்ணிற்கு சுண்ணாம்பும் வைப்பது போல, தங்களது புதல்வர்களின் இளமைக் காலத்திலேயே அவர்களுக்கு அனைத்து அதிகாரமும், பேரும், புகழும் கிடைத்துவிட வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்படும் திமுக தலைவர்கள், தமிழக இளைஞர்களைத் தொடர்ந்து வஞ்சிப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
கொடுத்த வாக்குறுதியின் படி லட்சக்கணக்கான அரசு காலிப் பணியிடங்களையும் நிரப்பாமல், கல்விக் கடனையும் ரத்து செய்யாமல், அரசுக் கல்லூரிகளையும் முறையாகப் பராமரிக்காமல் வதைக்குமளவிற்கு தமிழக இளைஞர்கள் மீது திமுகவிற்கு அப்படியென்ன வன்மம்?
ஓட்டுக்காக படித்த பட்டதாரிகளையே இப்படி கூசாமல் ஏமாற்றும் திமுக, படிக்காத பாமர மக்களை என்னவெல்லாம் கூறி, மடைமாற்றி தங்களின் மாயைக்குள் சிக்க வைத்திருக்கும்? இவ்வாறு, வெறும் பொய் பித்தலாட்டங்களால் கட்டமைக்கப்பட்ட திமுக எனும் கட்சி தமிழகம் எனும் புனித பூமியை ஆளலாமா? அதை நாம் அனுமதிக்கலாமா? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.