உலகம் இந்தியாவை நம்புகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செமிகான் இந்தியா மாநாட்டைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வரும் 4ஆம் தேதி வரை நடைபெறவுள்ள மாநாட்டில் 33 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், மாநாட்டின் வளாகத்தில் செமிகண்டக்டர் தொடர்பாக கண்காட்சி இடம்பெற்றுள்ளது. இந்தக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரத்து 100 அரங்குகளில் ஐபிஎம், மைக்ரான், டாடா எலக்ட்ரானிக்ஸ், டோக்கியோ எலக்ட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன.
செமிகான் மாநாட்டைத் தொடங்கி வைத்த பின் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருப்பதாகக் கூறினார்.
கடந்த நூற்றாண்டு எண்ணெய் கிணறுகளால் தீர்மானிக்கப்பட்டதாகக் கூறிய பிரதமர் மோடி, கச்சா எண்ணெய்யைக் கருப்பு தங்கம் என்று அழைத்தனர் எனத் தெரிவித்தார்.
21ஆம் நூற்றாண்டின் சக்தி ஒரு சிறிய சிப்புடன் மட்டுமே உள்ளது என்றும், உலகின் வளர்ச்சியை வேகப்படுத்தும் இந்தச் சிப்புகள் கருப்பு வைரங்கள் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியாவின் மிகச்சிறிய சிப் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்தியாவின் பயணம் தாமதமாகத் தொடங்கினாலும், எதுவும் நம்மைத் தடுக்க முடியாது எனத் தெரிவித்தார்.