ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், தனது திறமையால் பல்வேறு உச்சங்களைத் தொட்டு வருகிறார். மேலும், பலருக்கு முன்மாதிரியாகவும் இருந்து வருகிறார். யார் அவர்? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
ஒருவரின் வெளித்தோற்றத்தைக் கொண்டு அவரின் திறமையை எடைபோடும் தவறான அணுகுமுறை உலகம் முழுவதுமே இருந்து வருகிறது. நிறத்தைக் கொண்டு, உருவத்தைக் கொண்டு, உடையைக் கொண்டு, குடும்ப பின்னணியைக் கொண்டு ஒருவரை மதிப்பிட முயல்வது எப்போதும் தவறாகதான் முடியும்.
இதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார், ஆர்த்தி டோக்ரா ஐஏஎஸ். வெறும் 3.2 அடி உயரம் மட்டுமே கொண்ட இவர், தனது துறையில் எட்டி பிடிக்காத உயரங்களே இல்லை. உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூனில் பிறந்த இவர், மிகவும் புகழ்பெற்ற வெல்ஹாம் பெண்கள் பள்ளியில் பயின்றார்.
தந்தை ராணுவத்தில் பணியாற்றியதாலும், தாய் பள்ளி முதல்வராக இருந்ததாலும் ஆர்த்தி டோக்ராவைச் சிறு வயதுமுதலே துணிச்சலான பெண்ணாக வளர்த்தனர். உயரம் குறைவாக உள்ளதால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையையும் நீக்கினர்.
பள்ளி படிப்பைத் தொடர்ந்து டெல்லியில் பொருளாதாரப் பட்டம் பெற்ற ஆர்த்தி டோக்ரா, இந்தியாவின் கடினமான தேர்வுகளில் ஒன்றான சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத முடிவெடுத்தார். அவரது உயரத்தைக் கொண்டு பலர் அவரைச் சாதாரணமாகத்தான் எடைப் போட்டார்கள். இருப்பினும் முழுமூச்சாகப் படித்த அவர் முதல் முயற்சியிலேயே, ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்வானார்.
தான் பணியாற்றிய மாவட்டங்களில் எல்லாம் முன்மாதிரியான பல திட்டங்களை அவர் கொண்டு வந்தார். குறிப்பாக, திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தடுக்கும் வகையில் ஆஜ்மீரில் அவர் கொண்டு வந்த “புக்கா டாய்லெட்” திட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. நேபாளம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் வந்து அந்தத் திட்டம் குறித்து அறிந்து சென்றனர்.
ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலின்போது அஜ்மீர் மாவட்ட தேர்தல் ஆணையராகச் சிறப்பாக செயல்பட்டதற்காக, கடந்த 2019ம் ஆண்டு குடியரசுத் தலைவரிடம் இருந்து தேசிய விருதையும் அவர் பெற்றார். மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக அவர் தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.
இப்படி, தனது சாதனைகளால் பலருக்கு அவர் ரோல்மாடலாக விளங்கி வருகிறார் . மேலும், உயரத்தைக் காரணம் காட்டி விமர்சித்தவர்களும் நிமிர்ந்து பார்க்கும் அளவுக்கும் உயர்ந்துள்ளார் ஆர்த்தி டோக்ரா.