வேலூர் அருகே தங்களுக்காக கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் 7 ஆண்டுகள் கடந்தும் குடியிருக்க முடியவில்லை எனப் பழங்குடியின மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பழங்குடியின மக்களுக்காகக் கட்டப்பட்ட வீடுகள் பயன்பாடற்ற நிலையில் இருப்பது குறித்தும், மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியம் குறித்தும் இந்தச் செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த பரவக்கல் பகுதியில் 20க்கும் அதிகமான பழங்குடியின மக்கள் தற்காலிக குடிசைகளை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். குடிநீர், உணவு, கழிப்பிடம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், அன்றாடம் கூலி வேலைக்குச் சென்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.
பழங்குடியின மக்களின் தொடர் வேண்டுகோளின் அடிப்படையில் கடந்த 2018 – 19ம் ஆண்டில் பழங்குடியினர் நலத்திட்டத்தின் கீழ் 17 வீடுகள் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு கட்டப்பட்ட வீடுகளும் தற்போதுவரைப் பயன்பாட்டிற்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குடியிருப்புகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டு வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அதற்கான குடிநீர் இணைப்பு வசதியோ, மின்சார வசதியோ இன்று வரை வழங்காமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. நாட்டோடி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் தங்களுக்கென வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் அதனை வழங்காமல் காலம் தாழ்த்து மிகுந்த வேதனையளிப்பதாகப் பழங்குடியின மக்கள் தெரிவித்துள்ளனர்.
கட்டி முடிக்கப்பட்டும் பயனற்ற நிலையில் இருக்கும் பழங்குடியின மக்களுக்கான குடியிருப்புகள் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தும் கூடாரமாக மாறி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
தங்களுக்காகக் கட்டப்பட்ட வீடுகள் இது தான் எனத் தெரிந்தும் அதில் வாழ முடியாத சூழலுக்கு பழங்குடியின மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகமும், பழங்குடியினர் நலத்துறையும் உடனடியாகக் கூடுதல் கவனம் செலுத்தி அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்புகளைப் பழங்குடியின மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைப் பரவலாக எழுந்துள்ளது.