குடிநீர் உள்ளிட்ட பொது வளங்கள் அனைத்துச் சமூக மக்களுக்கும் பாகுபாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தென்காசியைச் சேர்ந்த திருமலைச்சாமி என்பவர் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையின்போது திருமலைக்கு ஜாமின் வழங்கினால், பொது குழாயில் தண்ணீர் பிடிக்க செல்லும்போது பிரச்னை ஏற்படும் எனப் பாதிக்கப்பட்ட பட்டியலினப் பெண் அச்சம் தெரிவித்தார்.
இதனை அடுத்து தலைவன்கோட்டைக் கிராமத்தில் பொது குடிநீர்க் குழாய்களின் எண்ணிக்கையை அதிகரித்து, மக்கள் மத்தியில் பாகுபாடு ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், உயர்நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த அரசாணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து குடிநீர் உள்ளிட்ட பொது வளங்கள் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல் கிடைக்கிறதா என்பதை மேற்பார்வையிட குழு அமைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவுகள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து கண்காணிக்கக் காவல் அதிகாரிகளுக்குத் தமிழக டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் ஆணையிட்டார்.