பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம், இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்ற உறுதிபூண்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரில் ஆப்ரேஷன் பிளாக் பாரஸ்ட் நடவடிக்கையில் ஈடுபட்ட சிஆர்பிஎப் வீரர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
டெல்லியில் நடைபெற்ற விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு வீரர்களுக்குச் சால்வை அணிவித்துப் பாராட்டினார்.
அப்போது பேசிய அவர், அச்சுறுத்தல் இருந்தபோதிலும் மிகுந்த மனஉறுதியுடன் நக்சல் முகாமை அழித்த வீரர்களின் தைரியம் பாராட்டுக்குரியது எனக் கூறினார்.
கர்ரேகுட்டா மலையில் இருந்த நக்சல்களின் சேமிப்பு கிடங்கு பாதுகாப்பு படை வீரர்களால் அழிக்கப்பட்டுள்ளது என்றும், நாட்டின் வளர்ச்சி குன்றிய பகுதிகளில் நக்சல்கள் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது பலத்த காயமடைந்த பாதுகாப்பு வீரர்களுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், 2026 மார்ச் 31ஆம் தேதிக்குள் நாட்டிலிருந்து நக்சல் பயங்கரவாதத்தை ஒழிக்க பாஜக அரசு உறுதிபூண்டுள்ளதாக அமித்ஷா தெரிவித்தார்.