சென்னை சூளைமேடு அருகே முறையாக மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் கால்வாயில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் நடைபெற்ற உயிரிழப்புக்குப் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.
சென்னை சூளைமேடு வீரபாண்டி நகரில் முறையாக மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் ஒருவர் விழுந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மழைநீர் வடிகாலுக்காகத் தோண்டப்படும் பள்ளங்களை முறையாக மூடுவதில்லை எனவும், பணிகள் நடைபெறுவதற்கான எச்சரிக்கைப் பலகைகள் கூட வைக்கப்படாததே தமது மகளின் உயிரிழப்புக்குக் காரணம் என உயிரிழந்த திபாவின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.
முறையாக மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகாலில் விழுந்து ஏற்பட்ட உயிரிழப்பை மறைக்க, தீபா கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பரப்பிய உண்மைக்குப் புரம்பான தகவல் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கணவர் இல்லாமல் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டு வேலை செய்து தனது குடும்பத்தைக் கவனித்து வந்த தீபா உயிரிழந்த நிலையில் குடும்பத்தினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
சூளைமேடு பகுதி மட்டுமல்லாமல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் எனும் பெயரில் தோண்டப்படும் பள்ளங்கள் மூடப்படாமலே கிடக்கின்றன. அதிலும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் பள்ளங்களில் சிக்கி அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி நிர்வாக்த்திடம் பலமுறைப் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் புகார்த் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்கும் முன் 95 சதவிகிதம் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகச் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து வரும் நிலையில், திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும் பணிகள் நீடிப்பதோடு, அதற்காக ஒதுக்கப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி என்ன ஆனது என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முழுக்க முழுக்கச் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் நடைபெற்ற உயிரிழப்புக்கு உரிய நிவாரண நிதியை வழங்குவதோடு, சென்னை மாநகராட்சி முழுவதும் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக எழுந்துள்ளது.