அதிமுக பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
2022ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழு கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்து திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்வுக்கு எதிரான வழக்கில் நீதிபதி பாலாஜி தீர்ப்பு வழங்கினார். அதில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்று கொண்டதாகவும், சூரியமூர்த்தியின் மனுவை நிராகரிக்க மறுத்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டார்.
மேலும், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த வழக்கையும் நீதிபதி நிராகரித்தார்.