ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்கள் மூலம், மோடி அரசின் தீபாவளி பரிசுக்கு மிக்க நன்றி என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வரலாற்று சிறப்புமிக்க ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் 2.0-ஐ அறிமுகப்படுத்திய பாரதப் பிரதமர் நரேந்திரமோடிக்கும் மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜிஎஸ்டியில் 5% மற்றும் 18% என்ற எளிமைப்படுத்தப்பட்ட இரண்டு அடுக்கு அமைப்பை அறிமுகப்படுத்துவது என்பது நமது பொருளாதாரத்திற்கும், வேலைவாய்ப்பு உருவாக்குவதிலும், நாட்டை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
மேலும், சிறு-குறு தொழில்வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க அளவில் பெரும் பயனளிக்கும். இந்த சீர்திருத்தங்கள் வணிகத்திற்கு மட்டுமன்றி மக்களுக்கும் பெரும் பயனளிப்பவை. மக்களின் செலவுத் திறனையும் சேமிப்புத் திறனையும் ஒருசேர ஊக்குவிக்கும் ஓர் அற்புத முயற்சி இது.
அன்றாட வாழ்வின் சுமையைக் குறைக்கும் வகையில் அத்தியாவசியப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டி 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. நமது விவசாயிகளுக்கு விவசாய இயந்திரங்கள் மற்றும் உயிரி பூச்சிக்கொல்லிகள் போன்ற முக்கியமான பொருட்கள் இப்போது குறைந்த ஜிஎஸ்டி விகிதத்தில் கிடைக்கப் போகின்றன. இது கிராமப்புற மக்களின் மீது நமது மத்திய அரசு கொண்டுள்ள உண்மையான அக்கறையைப் பிரதிபலிக்கிறது. இந்த சீர்திருத்தங்களின் மூலம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், நடுத்தர குடும்பங்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும்.
அடுத்ததாக, கடந்த பட்ஜெட்டில் தெரிவித்தது போல மக்களின் ஆரோக்கியத்தைப் பேணும் வகையில் உயிர்காக்கும் மருந்துப் பொருட்கள் மற்றும் ஆயுள் காப்பீடு மீதான ஜிஎஸ்டியைக் கருணை உள்ளத்துடன் முழுமையாக தள்ளுபடி செய்துள்ளது நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் என்றுமே நமது பாஜக சோடை போனதில்லை என்பதற்கான மற்றொரு உதாரணம் இது.
ஒரே வருடத்தில் வருமான வரியில் மாபெரும் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து நடுத்தர மக்களுக்கு வருமான வரிவிலக்கு அளித்ததோடு, ஜிஎஸ்டியிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்து மக்களின் சேமிப்பைக் கணிசமாக ஒரு அரசு உயர்த்துவதென்பது உலக வரலாற்றிலேயே இதுதான் முதன்முறை. அந்த வகையில் இன்றைய சமூகத்தை வலுப்படுத்தி, நாளைய வளமான பொருளாதாரத்திற்கு அடித்தளமிடும் இந்த ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகள், இதுவரை எந்த அரசும் வழங்காத மக்களுக்கான தீபாவளி பரிசு தான் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.