பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் தனது பதவியையும், அதிகாரத்தையும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யும் வகையில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்த செய்தித்தொகுப்பைப் பார்க்கலாம்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, வெளிச்சத்திற்கு வந்த பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், தனது அதிகாரச் செல்வாக்கை படிப்படியாக விரிவுபடுத்தி வருகிறார். ஃபீல்ட் மார்ஷல் பதவிக்கு உயர்த்தப்பட்ட அவர், இரண்டுமுறை அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்திருந்தார். அதிகாரப் போதையில் இருக்கும் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், 2030ஆம் ஆண்டுவரைத் தனது அதிகாரத்தை நீட்டிக்க அச்சாரம் போட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நீண்டகால அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையைக் கொண்டுவரும் முயற்சியாக “continuity of the system” என்ற திட்டத்தையும் அவர் முன்னெடுத்திருக்கிறார்.
பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முர்ரியில் தனியார் பண்ணை வீட்டில் இது தொடர்பான சந்திப்பு ரகசியமாக நடைபெற்றுள்ளளது. இதில் பாகிஸ்தானில் மூன்று முறைப் பிரதமராக இருந்தவரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் நிறுவனருமான நவாஸ் ஷெரீப் பங்கேற்றார். அவருடன் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பஞ்சாப் முதலமைச்சர் மரியம் நவாஸ், ராணுவ தளபதி அசிம் முனீர், ஐஎஸ்ஐ இயக்குநர் ஜெனரல் அசிம் மாலிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருக்கிறார்கள்…
பாகிஸ்தானில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்கள் யாரும், தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்யாத நிலையில், இந்தக் கூட்டத்தில் “continuity of the system” என்ற திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், சிவில் – ராணுவ நிர்வாகக் கட்டமைப்பை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளதாகவும், இதன் மூலம் தேசிய முடிவுகள், மூத்த ராணுவ நியமனங்கள் உள்ளிட்டவற்றில் அரசுக்கும், ராணுவத் தலைமைக்கும் இடையே ஒருமித்த கருத்து உருவாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்தி, அதிகாரத்தை இறுகப் பற்றிக் கொள்ளவும், முன்னாள் பிரதமர் இம்ரான் கானை அரசியலில் இருந்தே ஓரம் கட்டவும் பாகிஸ்தான் ராணுவ தளபதி திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அசிம் முனீரின் பதவிக்காலம் 2025 நவம்பர் 28ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அவரது இந்த நகர்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது. 2022ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட அசிம் முனீர், தனது மூன்றாண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்யும் சூழலில், 1952ம் ஆண்டு ராணுவ சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, தனது பதவியை 5 ஆண்டுகள் நீட்டிக்கவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு முன்னதாக ராணுவ தளபதியாக இருந்த கமர் ஜாவேத் பஜ்வா, மூன்று ஆண்டு பதவிக்காலம் முடிந்த பின்னரும் ஆறு ஆண்டுகள் ராணுவ தளபதியாகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.