இஸ்லாமியர்கள் மட்டும் வசிப்பதற்காக மும்பை அருகே அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நெரல். இங்கு கட்டப்பட்டுள்ள சுகுன் எம்பயர் அடுக்குமாடி குடியிருப்பை விற்பனை செய்வதற்கு விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டது.
அதில், ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர், ஒரே எண்ணம் கொண்ட குடும்பங்கள் வசிக்கவும் மற்றும் ஹலால் சூழலில் குழந்தைகள் வளரவும் குடியிருப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
பிரிவினையைத் தூண்டும் வகையிலான இந்த விளம்பரம் வைரலான நிலையில், Halal Lifestyle Township எனப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் பாஜக செய்தி தொடர்பாளர் அஜித் சவான், இதுபோன்ற முயற்சிகள் இந்தியாவின் மதச்சார்பற்ற கட்டமைப்பை அச்சுறுத்துவதாகக் கூறினார்.
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் பிரியங்க் கனூங்கோ, இந்தக் குடியிருப்பு பிரிவினைவாதத்தை வளர்ப்பதாகவும் தேசத்திற்குள் ஒரு தேசம் எனவும் விமர்சித்தார்.
தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு மகாராஷ்டிர அரசுக்குத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.