நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை எனப் புகார் எழுந்துள்ளது. மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் மதுரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, திருச்சி, சிவகங்கை, சிவகாசி, விருதுநகர், திருச்செந்தூர் என பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள், மதுரை மாட்டுத்தாவணி எம் ஜி ஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரையிலான மக்கள் பயன்படுத்தும் இந்தப் பேருந்து நிலையத்தில் பண்டிகைக் காலம் என்றால் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இந்தப் பேருந்து நிலையத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.
பராமரிப்பு எனும் பெயரில் பூட்டப்பட்ட ஆண்களுக்கான கழிப்பறை கடந்த ஆறு மாதங்களாகத் திறக்கப்படாததால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். பேருந்து நிலையத்தின் கழிப்பறைகள் மூடியிருப்பதை சாதகமாக பயன்படுத்தி தனியார் கழிப்பறைகள் அதிகக் கட்டணத்தை வசூலித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பேருந்து நிலையத்தின் கழிவுநீர்க் கால்வாய்கள் முறையாகத் தூர்வாரப்படாததன் காரணமாகக் கழிவுநீர் ஆங்காங்கே வெளியேறி சுகாதாரச் சீர்கேடு நிலவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பயணிகளுக்காக மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுச் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்கும் இயந்திரமும் யாருக்கும் பயனற்ற நிலையில் காட்சிபொருளாகவே காட்சியளிக்கின்றன
தூங்காநகரம் எனப் பெயர்பெற்ற மதுரையில் அமைந்துள்ள மிகப்பெரிய பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இப்படி இரவு பகலாக லட்சக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையம் அடிப்படை வசதிகளின்றிக் காணப்படுவது பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கவனம் செலுத்தி பேருந்து பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தருவதோடு, பேருந்து நிலையத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.