மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு பெரும் வரவேற்பை பெற்றுவரும் நிலையில், தமிழக அரசு சார்பில் குறைந்தபட்சம் மின் கட்டணத்தை கூட குறைக்க மறுப்பது தொழில்துறையினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் பன்மடங்கு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தையாவது திமுக அரசு குறைக்க வேண்டும் எனத் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் 50 சதவிகித வரி விதிப்பு தமிழகத்தின் பின்னலாடைத் தொழிலில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசு உடனடியாகப் பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்து பின்னலாடைத் தொழில் நிறுவனங்களைப் பாதுகாத்தது.
மத்திய அரசு தொழில்நிறுவனங்களைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தங்களின் நீண்டகால கோரிக்கையான மின் கட்டண நிலைக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு தற்போதுவரை நிறைவேற்றவில்லை எனத் தொழில்துறையினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தொழில்துறையை ஊக்குவிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரியைக் குறைத்து வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை எடுத்திருக்கும் மத்திய அரசின் முடிவு, தொழில்துறையினர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. நலிவடைந்து வரும் சிறு,குறு நடுத்தர தொழில்நிறுவனங்களைப் பாதுகாக்கும் வகையில் மின் நிலைக்கட்டணம், சோலார் நெட்வொர்க் கட்டணம் ஆகியவறை குறைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் இயங்கிவரும் பல ஆயிரக்கணக்கான சிறு, குறு நடுத்தர தொழில்நிறுவனங்களில் லட்சணக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், அமெரிக்கா விதித்திருக்கும் வரியின் காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருப்பதோடு உற்பத்தியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
கொரானா பரவல் காலத்தில் ஏற்பட்ட சரிவிலிருந்து மீண்டு வரும் நிலையில், அமெரிக்கா வரி விதிப்பு பேரிடியாக விழுந்திருப்பதாகவும், மத்திய அரசை பின்பற்றி சிறு,குறு நடுத்தர நிறுவனங்களைப் பாதுகாக்கும் வகையில் மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் தொழில்துறையினர்க் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொழில்துறையை மேம்படுத்த வேண்டும் என மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழக அரசு விளம்பரத்தில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வருவது தொழில்துறையினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் பன்மடங்கு உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணத்தையாவது உடனடியாகத் திரும்பப் பெற்றால் மட்டுமே சிறுகுறு நடுத்தர தொழிலைப் பாதுகாக்க முடியும் என்பதால் அவற்றை உடனடியாகக் குறைக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு ஒட்டுமொத்த தொழில்துறையினர் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்