சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்ட கராச்சி-பெஷாவர் திட்டத்திற்கு நிதியளிப்பதிலிருந்து சீனா பின்வாங்கி உள்ளது. அதற்கான காரணம் குறித்து, இந்தச் செய்தி தொகுப்பில் வரிவாகக் காண்போம்.
சீனாவும், பாகிஸ்தானும் நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன. இந்தியா உடன் எல்லைப் பிரச்னையைக் கொண்டுள்ள சீனாவும் பாகிஸ்தானும், மற்றொரு புறம் ஒன்றுக்கொன்று கைகோர்த்து நட்புறவை பேணி வருகின்றன.
பாகிஸ்தானின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, கடன் மற்றும் மானியமாக நிதி வழங்குவது எனப் பல்வேறு உதவிகளைச் செய்து வந்த சீனா, அந்நாட்டுடனான வர்த்தகத்தையும் அதிகரிக்கச் செய்தது. இதனால் ஏராளமான ராணுவ தளவாடங்களை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்தது சீனா. பாகிஸ்தான் பாதுகாப்பு துறையில் பயன்படுத்தப்படும் ராணுவ தளவாடங்களில் பெரும்பாலானவை சீனாவின் தயாரிப்பே.
இந்தச் சூழலில் சீனாவின் ஆதரவுடன் பாகிஸ்தான் செயல்படுத்திய திட்டம்தான் கராச்சி-பெஷாவர்த் திட்டம். 1,800 கிலோமீட்டர் நீளமுள்ள கராச்சி – பெஷாவர் திட்டம், பாகிஸ்தானின் முக்கிய ரயில் பாதைகளை நவீனமயமாக்கி, கராச்சியையும் பெஷாவரையும் இணைக்க செயல்படுத்தப்பட்டது.
பயணிகளின் எண்ணிக்கையும், சரக்கு பரிமாற்றத்தையும் அதிகரித்து, பாகிஸ்தான் ரயில்வேயின் செயல்திறனை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கம். சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் முக்கியப் பகுதியாகவும் இத்திட்டம் பார்க்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் ஏற்கெனவே 2015-19 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பாகிஸ்தானில் நெடுஞ்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் கட்டப்பட்டு வந்தன.
இத்திட்டத்தின் ஒரு பகுதியான குவாதர் கிழக்கு விரிகுடா விரைவுச் சாலைக் கடந்த 2022இல் நிறைவடைந்தது. இந்த நிலையில், கராச்சி-பெஷாவர் திட்டத்திற்கு நிதி வழங்க சீனா மறுத்துவிட்டது. அத்துடன் இந்தத் திட்டத்திலிருந்தும் சீனா வெளியேறியிருப்பது உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
பாகிஸ்தானின் மோசமான நிதி நிலைமை, கடனைத் திருப்பிச் செலுத்துவதில் உள்ள சிரமம், மின்துறை முதலீடுகளில் நிலுவைத் தொகைப் பிரச்னை ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்திலிருந்து சீனா வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
மேலும், சீனா பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்து வருவதாலும், அதிக அபாயமுள்ள நாடுகளில் முதலீட்டை குறைக்கும் போக்கும் இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அத்துடன் அமெரிக்கா-சீனா இடையேயான உறவு மோசமடைந்து வருவதும், இந்தியா-சீனா இடையே நல்லுறவு மேம்படுவதும் முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
சீனாவின் முடிவால் பேரதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கும் பாகிஸ்தான், கராச்சி-பெஷாவர் திட்டத்திற்காக 2 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியளிக்கக்கோரி ஆசிய மேம்பாட்டு வங்கியை நாடியுள்ளது. இருப்பினும் சீனாவின் ஆதரவின்மையால் கராச்சி-பெஷாவர் திட்டத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், சீனாவின் இந்த முடிவு பாகிஸ்தானுக்குப் பெரிய அடியாகப் பார்க்கப்படுகிறது.