ரஷ்யாவின் எல்லையில் இருக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கி வந்த பாதுகாப்பு நிதியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்த உத்தரவு, ஐரோப்பிய நாடுகளைக் கவலை அடைய வைத்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில், சொந்த நாட்டின் பாதுகாப்புக்காகப் போதுமான அளவு செலவு செய்யாத ஐரோப்பிய நட்பு நாடுகளை அமெரிக்கா இனி பாதுகாக்கப் போவதில்லை என்று தெரிவித்தார்.
மேலும், ட்ரம்பின் ஆலோசகரான சுமந்திர மைத்ரா, ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்புக்கான அமெரிக்காவின் உதவி, தவிர்க்க முடியாத போர் நெருக்கடி காலங்களில் மட்டுமே செயல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
தேர்தலில் வெற்றிபெற்று, இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்ற ட்ரம்ப், முதல் நாளிலேயே, அமெரிக்காவின் வெளிநாட்டு உதவியை மறு மதிப்பீடு செய்து, மறுசீரமைப்பதற்கான ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.
பதவியேற்றதும் முதலில் நேட்டோ தலைவர்களைச் சந்திப்பதே அமெரிக்க அதிபர்களின் வழக்கம். இந்த மரபுக்கு மாறாக, அதிபர் ட்ரம்ப் இரண்டாவது நாளில், குவாட் அமைப்பின் தலைவர்களையே சந்தித்தார். அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்று தனது கொள்கையின் அடிப்படையில் நேட்டோ நாடுகளுக்கான பாதுகாப்பு நிதி உதவியை ட்ரம்ப் நிறுத்தியுள்ளார்.
எல்லைப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு ஆகியவற்றில் அதிகக் கவனம் செலுத்தும் வகையில் ஐரோப்பிய பாதுகாப்பு நிதியை முடிவுக்குக் கொண்டுவரப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு, செப்டம்பர் வரை நேட்டோ நாடுகளுக்கான பாதுகாப்பு நிதியுதவி திட்டத்துக்கு ஏற்கெனவே அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில், இந்தத் திட்டத்தைத் தொடரப் போவதில்லை என்று ட்ரம்ப் நிர்வாக அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ட்ரம்பின் இந்தப் புதிய உத்தரவு குறித்து நாடாளுமன்றத்துக்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
பென்டகனின், ஐரோப்பா மற்றும் நேட்டோ கொள்கைக்கான தலைவரான டேவிட் பேக்கர், கடந்த வார இறுதியில் ஐரோப்பிய பாதுகாப்பு அதிகாரிகள் குழுவுக்கு ட்ரம்பின் இந்த முடிவைத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே கடந்த ஜூன் மாதத்தில், நேட்டோ நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிட ஒப்புக்கொண்டுள்ளன.
கடந்த ஜூலை மாதத்தில் எஸ்டோனியா, லாட்வியா மற்றும் லிதுவேனியாவை எல்லையாகக் கொண்ட மூன்று Baltic பால்டிக் நாடுகளின் தலைவர்களை சந்தித்த அமெரிக்கப் பாதுகாப்பு செயலாளர் Pete Hegseth, பாதுகாப்பு செலவினங்களை உயர்த்துவதற்கான அந்நாடுகளின் முயற்சியைப் பாராட்டினார்.
இந்நிலையில், பாதுகாப்பு நிதியுதவி இல்லை என்ற அமெரிக்காவின் முடிவு, ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள Estonia (எஸ்தோனியா), Latvia (லாட்வியா) மற்றும் Lithuania (லிதுவேனியா) ஆகிய கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குப் பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, அலாஸ்காவில் புதினுடனும், தொடர்ந்து,வெள்ளை மாளிகையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உட்பட ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களுடன் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். மேலும்,உக்ரைன் பாதுகாப்புக்காக நேட்டோ நாடுகளுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்யும் என்று தெரிவித்தார்.
உக்ரைன் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய ட்ரம்ப், இனி நேட்டோவுக்கு உதவுவதில் அர்த்தம் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பென்டகன் கொள்கைத் தலைவர் எல்பிரிட்ஜ் கோல்பி (Elbridge Colby), இந்திய பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுபதில் அதிகக் கவனம் செலுத்தவேண்டிய இக்கட்டான சூழலில், ஐரோப்பாவுக்கான பாதுகாப்பை நிதியுதவியை நீட்டிக்க முடியாது என்று கூறியுள்ளார்.