உலகின் மிகவும் பரபரப்பான கடல் பாதைகளில் ஒன்றான மலாக்கா ஜலசந்தி ரோந்துப் படைப்பிரிவில் இந்தியாவும் இணைந்தது குறித்த செய்தித் தொகுப்பை தற்போது பார்ப்போம்.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கும் மலேசிய தீபகற்பத்திற்கும் இடையில் அமைந்துள்ளது மலாக்கா ஜலசந்தி. அந்தமான் கடலையும், தென்சீனக் கடலையும் இணைக்கும் மலாக்கா ஜலசந்தி, மலேசியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுக நகரமான மலாக்காவின் பெயரால் அழைக்கப்படுகிறது.
உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மலாக்கா ஜலசந்தி, உலகின் பரபரப்பான கடல் பாதைகளில் ஒன்று. கடற்கொள்ளை, பயங்கரவாதம் மற்றும் கடத்தலைத் தடுப்பதற்காக இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளால் கடந்த 2004ஆம் ஆண்டு மலாக்கா நீரிணை ரோந்து படை உருவாக்கப்பட்டது. பின்னர் இதில் தாய்லாந்து இணைந்தது. MSPயின் நீண்ட கால ஒருங்கிணைப்பாளராகச் சிங்கப்பூர் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கும் இடையேயான சந்திப்பின் போது மலாக்கா ஜலசந்தி ரோந்து பணியில் இணைவதற்கான ஒப்புதல் கிடைத்தது.
செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் பாதுகாப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இந்தோ-பசிபிக் முழுவதும் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தவும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
இந்தியாவின் கடல்வழி வர்த்தகத்தில் சுமார் 60% சதவீதம், மலாக்கா ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. மலாக்கா ஜலசந்தியில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் இந்திய கடற்படைத் தனது தளத்தை விரிவுபடுத்தி இருக்கிறது.
இதனால் அங்கு ரோந்து மேற்கொண்டு கடற்கரை மாகாணங்களுடன் சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்த MSPயின் ஆதரவை நாடியது. இதன் மூலம் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்தி இந்தியா தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த முடியும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். MSPயில் இந்தியா இணைவது தங்களுக்கும் கூடுதல் பலம் சேர்க்கும் என்று சிங்கப்பூர் நம்புகிறது.
தென் சீனக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் சீனக் கடற்படை ஆதிக்கம் இருந்து வரும் நிலையில், MSPயில் இந்தியா இணைந்ததால், ஆசிய கடல்சார் பாதுகாப்பு உறவு, குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.