ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த அமைச்சருக்கு 2026 தேர்தலில் வாய்ப்பு அளித்தால் தொகுதியை பட்டா போட்டுவிடுவார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரில் பரப்புரை மேற்கொண்ட அவர், இதுவரை ஒட்டன்சத்திரத்தில் இவ்வளவு பெரிய மக்கள் வெள்ளத்தைப் பார்த்ததில்லை, அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டார் என்பதையே இந்த எழுச்சியில் பார்க்கிறோம். திமுக ஆட்சியில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஏதேனும் பெரிய திட்டம் கொடுத்தார்களா? இந்த அரசு மக்கள் விரோத, விவசாயிகள் விரோத அரசு என தெரிவித்தார்.
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை, அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை தள்ளுபடி செய்தோம்.
இங்கிருக்கும் அமைச்சர் மிகப்பெரிய கோடீஸ்வரர், தயவுசெய்து அடுத்த முறை அவருக்கு வாய்ப்பு கொடுத்துவிடாதீர்கள். அப்படி கொடுத்தால், ஒட்டன்சத்திரம் தொகுதியை பட்டா போட்டுவிடுவார்.
நீங்கள் எல்லாம் அன்னக்காவடி ஆகிவிடுவீர்கள். முதலில் எப்படி இருந்தார், இப்போது எப்படி இருக்கிறார் என்று பாருங்கள். உங்கள் நல்லதுக்காகச் சொல்கிறேன். அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கொடுங்கள் என இபிஎஸ் கேட்டுக்கொண்டார்.
இந்திய அளவில் தமிழகத்தை தலைகுனிய வைத்த கட்சி திமுக என்றும் அவர் சாடினார்.
திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.4.60 கோடி ஊழலில் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், ஆனால் மேயர் கைது செய்யப்படவில்லை என தெவித்தார்.
மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி வரி வசூலில் திமுகவினர் ஊழல் செய்துள்ளதாகவும் ஆனால் மேயரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.