ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார். அவரது திடீர் முடிவுக்குக் காரணம் என்ன? அடுத்த பிரதமராகும் வாய்ப்பு யாருக்கு உள்ளது என்பதைத் தற்போது பார்க்கலாம்..
ஜப்பானில் ஆளுங்கட்சியாக இருக்கும் Liberal Democratic Party-யில் பூதாகரமாக வெடித்த உட்கட்சி பூசல்… உள்ளாட்சி தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வி. போன்ற பல்வேறு காரணங்களால் பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ளார் பிரதமர் ஷிகேரு இஷிபா..
68 வயதான இஷிபா, கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து ஜப்பான் பிரதமர் பொறுப்பில் இருந்து வந்தார். அமெரிக்க வரி விதிப்பு, அதனால் ஏற்பட்ட அசாதாரணமான சூழல், விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பிரதமர் பொறுப்பை கவனித்து வந்தார் இஷிபா.
குறிப்பாக ஜப்பானிய மக்களின் பிரதான உணவான அரிசி மீது அமெரிக்கா அதிக வரியை விதித்தது. இதன் விளைவாக உள்ளூர்ச் சந்தையில் அரிசியின் விலைக் கிடுகிடுவென உயரத் தொடங்கியது.
இதன் காரணமாக ஆளும் Liberal Democratic Party-க்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு அலை வீசத் தொடங்கியது. அதுமட்டுமின்றி, கட்சியில் ஏற்பட்டுள்ள தொடர் அழுத்தத்தின் காரணமாகவும் இஷிபா தனது பதவியைத் துறந்ததாகக் கூறப்படுகிறது..
செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஷிகேரு இஷிபா, Liberal Democratic Party தலைவர் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியிலிருந்தும் விலகுவதாகக் கூறினார். இந்தத் தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்குக் கடமையை கடத்த விரும்புவதாகத் தெரிவித்தார். அப்போது அவர் உணர்ச்சிவசப்பட்ட குரலில் பேசியது அனைவரையும் கவலைக் கொள்ள செய்தது.
ஜப்பானில் அரசியல் குழப்பங்கள் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், தேர்தலில் ஏற்பட்ட தொடர் தோல்விகளால் நாடாளுமன்ற இரு அவைகளிலும் பெரும்பான்மைப் பலத்தை விட குறைவான உறுப்பினர்களைக் கொண்ட Liberal Democratic Party, கூட்டணி கட்சிகள் பலத்துடன் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது…
இந்த நிலையில், இஷிபாவுக்கு அடுத்தபடியாக, அவரது அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக இருந்த ஷின்ஜிரோ கொய்சுமி கட்சியின் புதிய தலைவராவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் அக்கட்சியின் முக்கிய தலைவர்களான சநே டகாய்ச்சி, டகாயூகி கோபயாஷி, யோஷிமாசா ஹயாஷி ஆகியோரிடையே கடும் போட்டி இருக்கும என்று எதிர்பார்க்கப்படுகிறது.. எனினும் கட்சி தலைமைக்கான தேர்தல்தான் புதிய தலைவர் யார் என்பதை தீர்மானிக்கும்.