ஆஸ்திரேலியா விமான நிலையத்திற்கு மல்லிகைப்பூ எடுத்துச் சென்ற மலையாள நடிகை நவ்யா நாயருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிபி மலையின் இஷ்டம், நந்தனம், அழகிய தீயே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். இவர் சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதை இரண்டு முறைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக நவ்யா நாயர் சென்றிருந்தார். அப்போது தனது தந்தை கொடுத்த மல்லிகைப் பூவில் ஒரு பகுதியைத் தலையில் சூடிய நவ்யா நாயர், மீதமுள்ள பூவைப் பையில் எடுத்துச் சென்றார்.
கொச்சியில் இருந்து சிங்கப்பூர் சென்றபின் அங்கிருந்து மெல்போர்னுக்கு விமானத்தில் பயணித்தார். இந்நிலையில் விமான நிலையத்தில் அவரை தடுத்து நிறுத்திய சுங்கத்துறை அதிகாரிகள், சட்டத்திற்கு எதிராகப் பூ எடுத்துச் சென்றதாகக் கூறி ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.