15 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயின் திருடி பழகிவிட்டதால் ஊராட்சி மன்றத் தலைவி ஆன பின்பும் அப்பழக்கத்தை விட முடியவில்லை எனத் திருட்டு வழக்கில் கைதான பெண் நிர்வாகி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருட்டை விட வேண்டும் என நாள்தோறும் சபதமேற்றாலும், பெண்களின் கழுத்து நிறைய செயினை பார்க்கும் போது தன்னை அறியாமல் தன் சபதத்தை மீறிவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையை சேர்ந்த வரலட்சுமி என்பவர் சமீபத்தில் பேருந்தில் பயணம் செய்த போது தன்னுடைய தங்க நகைகள் திருடு போயிருப்பதாகக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் படி கிடைத்த சிசிடிவி காட்சிகளைக் காவல்துறையினர் ஆய்வு செய்த போது, நகைத் திருட்டில் ஈடுபட்டவர்த் திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவி பாரதி என்பது தெரியவந்தது. திமுகவைச் சேர்ந்த பாரதி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், உடனடியாக அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை திருட்டு வழக்கு தொடர்பாகப் பாரதியிடம் விசாரிக்கத் தொடங்கிய காவல்துறைக்கு, அவர் அளித்த வாக்குமூலங்கள் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மட்டுமல்ல ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஓடும் பேருந்துகளில் செயின் திருட்டி ஈடுபட்டிருப்பதாகவும், பெண்களின் கவனத்தைத் திசை திருப்பி புத்திசாலித்தனமாக நகையை திருடுவேன் எனத் திமுக ஊராட்சி மன்றத் தலைவி பாரதி பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பேருந்து மட்டுமல்லாமல் தெருவில் பார்க்கும் குழந்தைகளிடம் அன்பாகப் பேசி அவர்களிடமும் நகையைத் திருடியிருக்கும் பாரதி, அவ்வாறு மட்டும் ஏராளமான நகைகளை திருடியிருப்பதாகவும் போலீசார் நடத்திய விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளார். 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில், திருடிய நகைகளைச் சட்டவிரோதமாக விற்று கிடைத்த பணத்தில் தனது சொந்த ஊரில் வணிக வளாகம் ஒன்றையும் கட்டியிருப்பதாகப் பாரதி தெரிவித்திருப்பது காவல்துறையினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 ஆண்டுகளுக்கும் மேலாகக் குலத் தொழிலாக மாறிவிட்ட திருட்டை, திமுக ஊராட்சி மன்ற தலைவி ஆன பின்னர் கைவிட வேண்டும் என உறவினர்களும், குடும்பத்தினரும் வற்புறுத்திய பின்னரும், தன்னால் திருட்டுத் தொழிலை விட முடியவில்லை எனவும் அவர் கூறியிருக்கிறார். வீடு, வணிக வளாகம், பணம், புகழ் என அனைத்தும் கிடைத்த பின்னரும், திருடும் போது கிடைக்கும் தனிச் சுகமே அத்தொழிலில் ஈடுபட முக்கிய காரணம் எனவும் பாரதி வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாள்தோறும் கண்விழிக்கும் போது, தாம் திருடக்கூடாது எனச் சபதம் ஏற்றுக் கொண்டாலும், பெண்கள் கழுத்து நிறைய நகைகள் அணிந்திருப்பதைப் பார்க்கும் போது தன்னை அறியாமலேயே திருடி விடுவதாக ஒப்புக் கொண்டிருக்கும் பாரதி, தமது திருட்டு பழக்கமே தம்மை இந்த நிலைக்குக் கொண்டு வந்திருப்பதாகவும் மன்னித்து விடுங்கள் எனவும் காவல்துறையினரிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே உணவகங்களில் பிரியாணி கேட்டு அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை என அடுத்தடுத்த வழக்குகளில் திமுக நிர்வாகிகள் கைதாகி வரும் நிலையில் செயின் திருட்டு வழக்கிலும் திமுக நிர்வாகி கைதாகியிருப்பது தமிழக மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊராட்சி மன்றத் தலைவர் பதவியில் இருக்கும் ஒருவர், ஊராட்சி மக்களுக்குச் செய்ய வேண்டிய நல்ல காரியங்கள் ஏராளம் இருக்க, தன் கவனம் முழுவதையும் திருட்டில் மட்டுமே செலுத்தி வந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் பாரதி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.