இந்தியாவின் மீதான 50 சதவீத வரி விதிப்பிற்கு, அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினர் டிரம்பின் கட்சிக்கு நன்கொடை வழங்காததும் ஒரு காரணம் என்று அந்நாட்டுப் பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரை தெரிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1998ம் ஆண்டிலிருந்து 2022ம் ஆண்டு வரை இந்திய-அமெரிக்கர்களிடமிருந்து பிரச்சாரப் பங்களிப்புகளின் பகுப்பாய்வு என்ற பெயரில் ஒரு ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது. இதில், அமெரிக்க அரசியலில் குறிப்பாக அதிபர் தேர்தலில் இந்திய-அமெரிக்கர்களின் பிரச்சாரப் பங்களிப்பு பற்றிப் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த (Joyojeet Pal) ஜோயோஜீத் பால் மற்றும் அசோகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த (Karnav Popat) கர்ணவ் போபட் மற்றும் (Vishnu Prakash) விஷ்ணு பிரகாஷ் ஆகியோர் விரிவாக ஆய்வு செய்துள்ளனர்.
அமெரிக்க அரசியலில், குறிப்பாக அதிபர் தேர்தல்களில், இந்திய-அமெரிக்கர்களின் முக்கியத்துவம் கடந்த ஆறு தேர்தல்களில் பெருமளவில் வளர்ந்துள்ளது.
முதல்முறை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பராக் ஒபாமாவுக்கு அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினர்களில் சுமார் 84 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர்.
பெரும்பாலும், தேர்தல் பிரச்சாரங்களில் இந்திய வம்சாவளியினர் பங்கேற்பதில்லை என்று கூறியுள்ள ஆய்வுக்கட்டுரையில், அந்த எண்ணிக்கை வெறும்1.3 சதவீதம்தான் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனாலும் இந்திய வம்சாவளியினர் கணிசமாக தேர்தல் நிதிக்காக நன்கொடை அளித்துள்ளனர்.
முன்பெல்லாம் இந்திய வம்சாவளியினர்களில் பெரும்பாலோர் ஜனநாயகக் கட்சிக்குத் தான் வாக்களிக்க விரும்புவதாகக் கூறியதாகப் பதிவு செய்துள்ள இந்த ஆய்வுக்கட்டுரை, 2016 ஆம் ஆண்டில் டிரம்பை விட கிளிண்டனை ஆதரித்தும், 2020-ல் பைடனுக்கு ஆதரவாகவும் இந்திய வம்சாவளியினர் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் இந்திய-அமெரிக்கத் தேர்தல் நன்கொடையாளர்களின் எண்ணிக்கை ஆச்சரியப்படும் வகையில் 550 சதவீதம் அதிகரித்துள்ளது. 2000-ல் 6,700 ஆக இருந்த நன்கொடையாளர்களின் எண்ணிக்கை 2020-ல் 43,000 ஆக அதிகரித்துள்ளது என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.
இதில் ஒவ்வொரு தேர்தலிலும் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே ட்ரம்பின் குடியரசு கட்சிக்கு இந்திய அமெரிக்கர்கள் நன்கொடை கொடுத்துள்ளனர்.
2019-ல் பிரதமர் மோடியுடன் டெக்சாஸில் ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிபர் ட்ரம்ப், இந்திய அமெரிக்கர்களின் ஆதரவை பெற முயற்சி செய்தார்.
மீண்டும் இரண்டாவது முறையாக அதிபரான ட்ரம்ப், முக்கிய உயர் பொறுப்புகளில் இந்திய வம்சாவளியினரை நியமித்தார். அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் மனைவி உஷா வான்ஸ், முதல் இந்திய அமெரிக்க இரண்டாவது பெண்மணியாக உள்ளார்.
2000க்குப் பிறகு அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த இந்தியர்களான ஐடி துறையினர், அமெரிக்க அரசியலில் ஒரு மாபெரும் சக்தியாக மாறியுள்ளனர். ட்ரம்பின் குடியரசு கட்சியை விட ஜனநாயகக் கட்சிக்கே அமெரிக்கா வாழ் இந்தியர்கள் அதிகளவில் நன்கொடை அளித்திருப்பதும், இந்தியா மீதான கூடுதல் வரி விதிப்பிற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்திய அமெரிக்கர்களின் ஆதரவை ட்ரம்ப் இழந்து வருகிறார் என்பதே உண்மை.