குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், 452 வாக்குகள் பெற்று அமோக வெற்றிப் பெற்றார்.
14வது குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட ஜெகதீப் தன்கர் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி பதவி விலகிய நிலையில், 15வது குடியரசு துணைத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில் NDA கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன், INDI கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி ஆகியோர் போட்டியிட்டனர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த வாக்குப்பதிவில், பிரதமர் மோடி முதல் ஆளாகத் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் இண்டி கூட்டணி கட்சிகளின் எம்பி-க்களும் வாக்குகளை பதிவு செய்தனர். பாரத ராஷ்ட்ரீய சமிதி, பிஜூ ஜனதா தளம் மற்றும் அகாலிதளம் ஆகிய கட்சிகள் புறக்கணித்தன.
மாலை 5 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மொத்தம் 767 வாக்குகள் பதிவான நிலையில் மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட்டது. இரவு 7 மணியளவில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் முடிவுகளை, மாநிலங்களவை செயலாளர் பிரமோத் சந்திர மோடி அறிவித்தார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளில் 15 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்ட நிலையில், INDI கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி-க்கு 300 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.