இமாச்சலில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இயற்கை பேரிடரால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்த நிலையில், இமாச்சலுக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கலந்துரையாடினார். அவர்களது குறைகளையும் கேட்டறிந்தார். இதையடுத்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினரிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசித்தார்.
பின்னர், அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங், ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லா ஆகியோரைச் சந்தித்த பிரதமர் மோடி, வெள்ளப் பாதிப்பு குறித்து திரையிடப்பட்ட விளக்கக் காட்சியை பார்வையிட்டார்.
இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சல் மக்களுக்கு மத்திய அரசு ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், வெள்ளத்தால் சேதமடைந்த நெடுஞ்சாலைகளை அமைப்பது, பள்ளிகளை மீண்டும் கட்டுவது, பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தி இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.