சென்னையில் இருந்து திருச்செந்தூர் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் 52 சவரன் நகை திருடுபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டிணத்தைச் சேர்ந்த தங்க நகை வியாபாரியான அபுதாகீர் என்பவர் அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
இவரது நண்பரான ஆரிஸ் என்பவர் 52 சவரன் நகையை பார்சல் மூலம் தனியார் ஆம்னி பேருந்தில் அனுப்பி வைத்துள்ளார்.
சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்தில் பார்சல் அனுப்பப்பட்ட நிலையில், ஆறுமுகநேரிக்கு ஆம்னி பேருந்து வந்தபோது பார்சலை வாங்க அபுதாகீர் சென்றுள்ளார்.
அப்போது, பேருந்தில் பார்சல் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அபுதாகீர், ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் இது குறித்து கேட்டுள்ளார்.
இருவரும் முன்னுக்கு பின் முரணாகப் பதிலளித்ததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.