சென்னை புளியந்தோப்பு பகுதியில் மதுபோதையில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை மடக்கிப் பிடித்த தமிழகக் காவல் துறையினரின் மீது நடுரோட்டில் அந்த போதைக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நிர்வாகத் திறனற்ற அறிவாலய
அரசு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைக் கைபிடித்து அழைத்துச் சென்று முட்டுச் சந்தில் நிறுத்தியுள்ளது என்பதை உணர்த்தும் இந்தச் சம்பவம் அரசு அதிகாரிகளைப் பதற்றத்திலும், பொதுமக்களை அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதுவும் கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட பிறகும் கூட காவல் ஆய்வாளரின் முன்னிலையிலேயே கொஞ்சம் கூட பயமின்றி தகாத வார்த்தைகளால் கொலை மிரட்டல் விடுவது, காவல்நிலையத்தை அடித்து நொறுக்குவது என அராஜகத்தின் உச்சியில் அந்த நபர்கள் நடந்து கொள்வதைப் பார்க்கையில், திமுக ஆட்சியின் கீழ் இயங்கும் காவல்துறையினர் மீது பொதுமக்களுக்கும் நம்பிக்கையில்லை, குற்றவாளிகளுக்கும் துளியும் பயமில்லை என்பது தெளிவாகத் தெரிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, கடந்த நான்காண்டுகளில் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே வருவதற்கான காரணம் என்ன என்பது தான் புரியவில்லை.
ஒருவேளை, திமுகவின் கட்டளைகளை மட்டுமே நிறைவேற்றும் கட்டப்பஞ்சாயத்து மன்றமாக மாறிய காவல்துறையினரைக் கண்டு குற்றவாளிகளுக்கு குளிர்விட்டுப் போய்விட்டதா? அல்லது தமிழக முதல்வர் ஸ்டாலினின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையினரிடையே நேர்மையும் வலிமையும் குறைந்துவிட்டதா என்ற சந்தேகமும் மக்கள் மனதில் எழுவதாகவும் கூறியுள்ளார்.
இது பெரும் ஆபத்தானது. எனவே, “குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன்” என வீண் வசனம் பேசிக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின்
முதலில் காவல்துறையினர் மீது நிகழ்த்தப்படும் வன்முறைத் தாக்குதல்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.
தமிழகக் காவல்துறையினரின் பாதுகாப்பை உறுதிசெய்வதோடு, அவர்கள் எவ்வித சமரசமுமின்றி மக்கள் பணியாற்ற வழிவகை செய்ய வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.