தூய்மை பணியாளர்களின் கைது நடவடிக்கையின்போது மனித உரிமை மீறலில் ஈடுபட்ட போலீசாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான மனு, தலைமை நீதிபதி ஸ்ரீ வஸ்தவா, அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், போராட்டத்தில் தூய்மை பணியாளர்களுடன் சட்டவிரோத கும்பல் நுழைந்து காவல்துறையினரை தாக்கியதாகவும், இது தொடர்பான வீடியோ ஆதாரங்களும் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அப்புறப்படுத்தும்போது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுவது புதிதல்ல என கூறினார்.
நீதிமன்றம் உத்தரவிட்டதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏன் அமைதியாக கலைந்து செல்லவில்லை என்று மனுதாரர்கள் தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அரசு ஒரு கொள்கை முடிவை அறிவிக்கும் போது அது குறித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களிடம் ஆலோசிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
அனுமதி பெற்ற பிறகே போராட்டம் நடத்த வேண்டுமென கூறிய தலைமை நீதிபதி, வழக்கில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.