பிரம்மோஸ் மற்றும் பிரம்மோஸ் என்ஜி ஏவுகணை சோதனையில் ரஷ்யா ஆர்வம் காட்டுவதன் மூலம், இந்திய பாதுகாப்புத் துறைக்கு பெரும் ஊக்கம் கிடைத்துள்ளது. அதுபற்றி விரிவாக பார்போம்.
இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சியால் உருவானது பிரம்மோஸ் ஏவுகணை. நிலம், நீர் மற்றும் வான்பரப்பில் இருந்து ஏவக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டது இந்த பிரம்மோஸ் ஏவுகணை.
உலகில் எந்த வான் பாதுகாப்பு அமைப்பும் பிரம்மோஸ் ஏவுகணையை இடைமறிக்க முடியாது. இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போதும் இது நிரூபிக்கப்பட்டது. இதனால் பல நாடுகள் ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பிறகு பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க அணுகியுள்ளன.
இந்த வரிசையில், ரஷ்யா தனது ஆயுதப் படைகளில் பிரம்மோஸின் அடுத்த தலைமுறை ஏவுகணையான ’பிரம்மோஸ்-என்ஜி’-யை சேர்க்கலாம் என்று தெரிவித்துள்ளது.
பிரம்மோஸ்-என்ஜி என்பது பிரம்மோஸ் ஏவுகணையின் மேம்பட்ட மற்றும் இலகு ரக வடிவமாகும். இது இந்திய பாதுகாப்புத் துறையின் மிகப்பெரிய சின்னமாக பார்க்கப்படுகிறது. இது அசல் பிரம்மோஸ் ஏவுகணையில் பாதியளவு எடை கொண்டது, இதனால் போர் விமானங்கள் அதிக ஏவுகணைகளை சுமந்து செல்ல முடியும்.
பிற நாடுகள் காட்டும் ஆர்வத்தால் ஊக்கமடைந்திருக்கும் பிரம்மோஸ் ஏரோ-ஸ்பேஸ், தற்போது ஏவுகணையை அதிக எண்ணிக்கையில் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது உற்பத்தி செலவைக் குறைத்து, வாங்குவோர் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 25 ஆண்டுகளில், சராசரியாக ஆண்டுக்கு 25 யூனிட்கள் மட்டுமே அதாவது சுமார் 1,000 பிரம்மோஸ் ஏவுகணைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது பிரம்மோஸின் அதிக தேவை காரணமாக உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவும் ரஷ்யாவும் முடிவு செய்துள்ளன.
பொதுவாக பிரம்மோஸ் ஏவுகணை 3,000 கிலோ எடை கொண்டது. அதே நேரத்தில் விமானப்படையில் பயன்படுத்தக் கூடிய வகை 2,500 கிலோ எடை கொண்டது. பிரம்மோஸ்-என்ஜி சுமார் 1,250 கிலோ எடையுள்ளதாக இருக்கும் இது மிக்-29 மற்றும் எல்சிஏ தேஜாஸ் எம்கே-1 ஏ போன்ற இலகுவான போர் விமானங்களில் சுமந்து சென்று ஏவுவதற்கு ஏற்றது.
எண்ணற்ற சிறப்புகள் வாய்ந்த பிரம்மோஸ்-என்ஜியின் சோதனை 2026இல் தொடங்கும் என ஓய்வுபெற்ற ஜாகுவார் விமானி விஜயேந்திரா கே.தாக்கூர் தெரிவித்திருப்பதாக யூரேசியன் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஏவுகணையை ரஷ்யா பெறும் வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு BrahMos Aerospace துணை தலைமை நிர்வாக அதிகாரி Chilukoti Chandrasekhar தெரிவித்துள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணைகளின் விலையை குறைக்க இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து பணியாற்றி வருவதாகவும், இதன் மூலம் அதிகப்படியான ஏற்றுமதி ஒப்பந்தங்களை ஒரே நேரத்தில் நிறைவேற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏற்றுமதியுடன் சேர்ந்து இந்தியாவின் ஆயுதப் படைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய உற்பத்தி வசதிகளை விரிவாக்க வேண்டும் என்றும், அதற்கான திறன்களை மேம்படுத்த ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் BrahMos Aerospace துணை தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.